Saturday, November 16, 2013
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்!
அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.
பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.
தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.
வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை.
வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது.
இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.
ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?
குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா?
றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.
இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.
“அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.
பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.
தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தனத நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியாத அரபிகள்,
தனது நாட்டில் மனித நேயத்தைப் பாதுகாக்காத அரபிகள்
எப்படி மற்றைய நாடுகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியும்?
இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை.
இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.
முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன?
அரபுகள் மடையர்களாக இருக்கலாம், அரபுகளிடமிருந்து பணம் பெறுகின்ற
இஸ்லாமிய இயக்க யாசகர்களும் மடையர்களாக மட்டுமல்ல இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாறு செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
காரணம், இந்த இயக்கங்கள் அரபு அமெரிக்க செயற்திட்டத்தை தஃவாவின் போர்வையில் மனமுரண்டாக நிறைவேற்றியும் வருகின்றார்கள்.
மற்றும்-
அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும்,
பள்ளிவாசல்கள் கட்டுதல்,
உழ்ஹய்யா கொடுத்தல்,
கிணறு வெட்டுதல்
போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது.
அது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்குள் சிறைபட்டு நிற்கும் சஊதி மன்னராட்சியை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு இஸ்லாத்தை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அரபுகளின் மன்னராட்சியை அது பாதுகாத்தே ஆக வேண்டும்.
அரபுகளின் மன்னராட்சி உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், இஸ்லாத்தின் ஏக போக உரிமை அரபுகளிடம் இருக்கவேண்டும். அப்போது தான் இஸ்லாம் என்ற போர்வையில் தனக்கு தேவையானவற்றை கூட்டியு்ம், தனக்குதேவையில்லாதவற்றை குறைத்தும், மறைத்தும் கூற முடியும்.
அரபுகளின் நிதி பலத்தில் இஸ்லாமிய தஃவாவை சிறைப்பிடித்து வைப்பதன் மூலம்...
0 அமெரிக்காவினதும், சஊதியினதும் நன்மைக்காக
உலகளாவிய ரீதியில் எழும் இஸ்லாமிய அரசியல் எழுச்சியை அடக்கமுடியும்.
0 முஸ்லிம்களின் சிந்தனையை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளில் சிக்க வைக்கமுடியும்.
0 அரபுகளின் அரசியலுக்கேற்ப இஸ்லாத்தை கூட்டியும், குறைத்தும் வடிவமைக்க முடியும்.
இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.
அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
கடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும்
ஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா
ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா
பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா
இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா
இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா?
ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...
ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....
தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.
அதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை!
இதனால் ஏற்படும்
இழப்பு...
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம் உம்மத்திற்கும்,
இலாபம்..
அரபு மன்னர்களுக்கும்
அவர்களின் யெஹுதி நஸாரா தோழர்களுக்கும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment