Saturday, February 8, 2014

* நாட்டை நாறடிக்கும் காவிச்சாமிகளும் ஆசாமிகளும்





மதக் குரோதத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, சிங்கத்தின் வாளை கையிலேந்தி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் காவி உடை தரித்த இனவாத சாமியார்களும் அவர்களுக்கு குற்றேவல் புரியும் ஆசாமியார்களும் பெரும்பான்மை மக்களின் இன உணர்வுகளை தூண்டும் விதத்திலான கோஷங்களை ஏந்திக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பேரணி என்ற பெயரில் நாட்டை இனவாத சாக்கடையில்மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்களுக்கு விற்கப்படும் துணிமணிகளில், இனிப்புப் பண்டங்களில் மலட்டுத்தன்மையை உண்டாக்கக் கூடிய இரசாயணப் பொருள் கலந்திருப்பதாக பிரச்சாரம் செய்யும் இவர்கள், முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பாரிய பிரச்சாரமொன்றை மேற்கொண்டு வருகிறார்கள். முஸ்லிம் வியாபார நிலையங்களுக்கு முன்னால் உணர்வுகளைத் தூண்டும் கோஷங்களைக் கூறிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரு சமூகம் பொறுத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தான். சிங்கள பௌத்தர்கள் மத்தியிலும், விகாரைகளிலும் பரப்பிக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் இன்று பௌத்த அறநெறிப் பாடசாலைகள் வரை வியாபிக்கப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

அறநெறிப் பாடசாலைகளில் இன்று இனவெறி போதிக்கப்படுகிறது. நல்லறத்தையும், நன்நடத்தையையும் போதிக்க வேண்டிய மடலாயங்கள், சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் போதிக்க வேண்டிய அறநெறிப் பாடசாலைகள் இன்று இனத்துவேசத்தையும், இனக்குரோதத்தையும் போதிக்கும் இனவெறிப்பாடசாலைகளாகவும், மதவெறிப் பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அறத்திற்குப் பதிலாக அங்கே மறம் போதிக்கப்படுகிறது. ஒரு இனம் இன்னொரு இனத்தை எப்படியெல்லாம் வம்புக்கு இழுக்க வேண்டும், எந்த விதமான வார்த்தைப் பிரயோகங்களால், செயல்களால் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு கலக்கப்படுகிறது. பிஞ்சு வயதிலேயே ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்களுக்கு விற்கப்படும் துணிமணிகளில், இனிப்புப் பண்டங்களில் மலட்டுத்தன்மையை உண்டாக்கக் கூடிய இரசாயனப் பொருள் கலந்திருப்பதாக பிரச்சாரம் செய்யும் இவர்கள், முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பாரிய பிரச்சாரமொன்றை மேற்கொண்டு வருகிறார்கள். முஸ்லிம் வியாபார நிலையங்களுக்கு முன்னால் உணர்வுகளைத் தூண்டும் கோஷங்களைக் கூறிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

ஜெர்மனியில் யூதர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிப்பதற்கு முன்னர் இவ்வாறான நடவடிக்கைகளில்தான் நாஜிகள் ஈடுபட்டிருந்தார்கள். இப்படியான பிரச்சாரங்கள் தான் செய்யப்பட்டன. முதலாவதாக யூதர்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாயின. பின்னர் யூதர்களின் பொருளாதாரத்தின் மீது கைவைக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக துவங்கின. இதற்காக ஜெர்மன் பூராவும் இரகசியமான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. ஜெர்மனியில் குடியேறியிருந்த வெளிநாட்டினரின் வாசகால அனுமதிகள் திடீரென ரத்துச் செய்யப்பட்டு, போலந்து- ஜெர்மன் கலப்பின யூதர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

இவ்வாறு ஜெர்மனியிலிருந்து விரட்டப்பட்ட் Hershel Grynp என்ற யூதரால் பாரிஸில் வைத்து Ernst vom Rath என்ற ஜெர்மனியர் சுட்டுக் கொல்லப்பட்டார். நாஜிகளுக்கு இது போதாதா? நீறு பூத்த நெருப்பாக இருந்த யூதர்களுக்கு எதிரான இனவாதத் தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. 1938 நவம்பர் 9- 10 திகதி இரவுகளில் ஜெர்மன் பூராவுமுள்ள யூதர்களுக்குச் சொந்தமான தேவாலயங்கள், வியாபார நிலையங்கள், நிறுவனங்கள், பாடசாலைகள், மருத்துவ நிலையங்கள் ஆகிய அனைத்து கட்டடங்களினதும் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. இது Crystal Night என அழைக்கப்படுகிறது. இதன் போது யூதர்களுக்குச் சொந்தமான 7000 த்திற்கும் அதிகமான கடடிடங்கள் நாஜிகளால் தரைமட்டமாக்கப்பட்டன.

நாஜி போலிசார் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததோடு, நாஜிகளின் பிரச்சார வலையமைப்பின் ஊடாக இவை நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு அவர்கள் கூறிய காரணம் வேடிக்கையாகவே இருந்தது. முதலாவது உலக யுத்தத்தின்போது ஜர்மனி அடைந்த படுதோல்விக்குக் காரணம் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்கள் தான் என்பது. கண்ணாடிகள் உடைக்கும் இரவில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதோடு, அவர்கள் ஜெர்மன் மக்கள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

அவர்கள் திட்டமிடப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். சிறிய பெட்டியொன்றில் எடுத்துச் செல்லக் கூடிய அளவிற்கே அவர்களது உடைமைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. நாஜி அரசாங்கமும், யூதர் அல்லாதவர்களும் அவர்களது சொத்துக்களை அபகரித்து கொண்டனர். இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் ஹிட்லரின் ஊதுகுழலான கொபெல்ஸ், மேற்படி நடவடிக்கைகள் தமது கட்சியால் மேற்கொள்ளப்பட்டவையல்லவென்றும், எப்படியிருந்தாலும் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையை தடுக்க முடியாதெனவும் கூறினார்.

வெளிநாட்டுப்பிரஜைகள் மீதோ, யூதர்கள் அல்லாதவர்கள் மீதே, அவர்களது சொத்துக்களுக்கோ எவ்வித சேதமும் விளைவிக்கக் கூடாதென நாஜிப் படைகள் அறிவுறுத்தப்படுத்தப்பட்டிருந்தன. பெருந்தொகையான யூதர்கள் கைது செய்யப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான யூதர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். மேற்படி சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உணர்வுகளைத் தூண்டக் கூடிய வாசகங்களால் கோபமுற்ற ஒரு யூதர் செய்த கொலை ஜெர்மனியில் வாழ்ந்த ஒட்டு மொத்த யூதர்களுக்குமே பேரழிவைக் கொண்டு தந்தது. புகைந்து கொண்டிருந்த இனவாதத் தீ ஒரு கொலையோடு கொழுந்து விட்டெரியத் துவங்கியது.

இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இப்படியான ஒரு பேரழிவை ஏற்படுத்துவதற்காகத்தான் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புகள் மும்முரமாக செயற்பட்டு வருவது தெரிகிறது. பல்வேறு இனவாதக் கோஷங்களை முன்வைத்து முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி இன்னொரு இனவாத அழிவிற்குள் நாட்டை இழுத்துச் செல்ல இந்த அமைப்புகள் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன.

சமீபத்தில் மாத்தறை திக்குவலையில் மூன்று முஸ்லிம் யுவதிகள் தமது கலாச்சார உடையில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது இனவாதக் காடையர்கள் அவர்களது ஆடைகளை இழுத்து வம்புக்கிழுத்தனர். அதனை சுற்றி நின்றோர் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கும்போது என்ற பாரதியின் பாடல்தான் நினைவிற்கு வருகிறது.இந்த நிலையிலும் முஸ்லிம்கள் பொறுமை காத்தது நாட்டின் நலன் கருதியாகத்தான் இருக்க வேண்டும். அநீதிகளும் அக்கிரமங்களும் எங்கு நடந்தாலும் அதனைத் தட்டிக் கேட்கும் நாள் வரவேண்டும்.

அநீதிக்கெதிராக மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எல்லா அடக்குமுறைகளும், எல்லா ஒடுக்குமுறைகளும் முடிவு கட்டப்படும். நாட்டில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. உழைக்கும் வர்க்கம் சாப்பாட்டிற்கே ததிக்கி நத்தோம் தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. பச்சிளம் பாலகிகள் கூட காமப் பேய்களினால் மட்டுமல்ல காவிகளினாலும் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாலியல் வக்கிரங்கள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவை அவர்களின் குற்றமா? அல்லது இந்த முறையின் குற்றமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேற்கத்திய கலாச்சார சீரழிவிற்குள் சிக்கி இளைய சமுதாயம் நாசமாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம். உழைப்பாளிக்கு ஒழுங்கான ஊதியம் கிடைப்பதில்லை. இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடையாத ஆளும் வர்க்கம் தனது ஆசீர்வாதத்தோடு தூண்டிவிட்ட இனவாதம் இன்று தனது கட்டுப்பாட்டையும் மீறி சென்று கொண்டிருப்பதை தடுக்க முடியாத தனது கையாலாகாத்தனத்தை மேடையேற்றிக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

நவதாராளமய முதலாளித்துவத்தின் எஜமானியத்தோடு ஆட்சிக்கட்டில் அமர்ந்து கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஸ அரசாங்கம் தான் தூண்டிவிட்ட இனவாதத்தை கட்டுப்படுத்த முடியாமல் பிதற்றிக் கொண்டிருப்பது ஆசியாவின் ஆச்சரியம் தான்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment