Wednesday, August 7, 2013

* மாடறுக்கும் மடுவங்களாக மாறப்போகும் மஸ்ஜிதுகள் .........????? ACJU வினரின் 'மாட்டு'த்தனமான தீர்மானங்கள்........... ??


மாடறுக்கும் மடுவங்களாக மாறப்போகும் மஸ்ஜிதுகள் .........????? ACJU வினரின் 'மாட்டு'த்தனமான தீர்மானங்கள்........... ??



சென்ற வாரம் இலங்கையில் அநேகமாக எல்லா மஸ்ஜித்களிலும் சொல்லிவைத்தால் போல ஒரே தொனியிலான ஜும்மாஹ் பிரசங்கங்கள்.



மாடறுக்கும் செய்கைக்கு இலங்கை பெரும்பான்மை பௌத்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காரணத்தினால் ஹஜ்ஜுப் பெருநாளன்று மாடறுத்து 'குர்பான்' செய்யத் தீர்மானித்து இருக்கும் முஸ்லிம் தனவந்தர்கள் தமது பெயரை தமது மஹல்லா பள்ளி வாசல் நிர்வாக சபையினரிடம் பதிவு செய்யுமாறும்,அவ்வாறு முன் கூட்டியே பதிவு செய்தால் அவர்கள் குர்பான் செய்ய இருக்கும் மாட்டுக்கான அனுமதியையும் அந்தக் குறிப்பிட்ட மாட்டை மஸ்ஜித் வளாகத்தில் வைத்து அறுக்கும் வசதியையும் பள்ளி நிர்வாகம் செய்து கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கு ACJU விசேட செயல் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் ஜும்மாஹ் பிரச்சாகரர்கள் பிரசங்கம் நிகழ்த்தினார்கள்.

மாடறுப்பதட்கு தாம் தடையாக இருப்பதற்கு காரணம் சொல்லும் பெரும்பான்மை இன மக்கள் ஆட்டை அல்லது கோழியை அறுத்து மக்கள் உணவாக கொள்வதற்கு தடை விதிப்பதில்லை.

ஆகவே, இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் தினத்தன்று மாட்டை தவிர்த்து விட்டு ஆட்டை குர்பான் செய்தால் பிரச்சினை தீர்ந்து விடும்.


பூதாகரமாக காட்டப் படுகின்ற விடயம் இவ்வளவு எளிதாக சமாளிக்க கூடியதாக இருக்கும் நிலையினை கருத்தில் கொள்ள மறுத்து மாடறுக்கும் செய்கையை இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் உரிமையாக கருதி அதற்காக வரிந்துக் கட்டி நாம் எப்படியும் மாட்டை அறுத்தே தீருவோம் என்று ஒற்றைக் காலில் நிற்பது சாணக்கியமான செயல் அல்ல என்பதை ACJU புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பள்ளி வாசல் முற்ற வெளியில் இரு கரமேந்தி யாசிக்கும் மக்கள் தொகை இன்னும் குறைந்த பாடில்லை.இவர்கள் இன்னும் யார் கண்ணிலும் படவில்லை.

பள்ளிவாசல்களை சுற்றிலும் வாழ்கின்ற ஏழை மக்கள் அன்றாடம் ஒரு வேளை உணவுடன் மட்டுமே தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த ஏழைகளின் வாழ்வியல் ஆதாரத்தை மேம்படுத்தும் செயல் திட்டங்கள் பள்ளிவாசல்களிலோ அல்லது இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவ தகுதி தமக்கு இருப்பதாக வாதிடுகின்ற ACJU விடமோ எள்ளளவும் இல்லை.

ஆனால், ஆச்சரியமாக மாட்டை அறுக்கும் செயலுக்கு புனிதத்துவ சாயம் பூசிக்கொண்ட நமது உலமாக்களோ இலங்கை முஸ்லிம்களின் அன்றாட வாழ்வியல் ஆதாரம் அறுக்கப் படுகின்ற மாடுகளிடம் இருப்பது போன்றதொரு மாயையை உருவாக்கி தம்மை ஏமாற்றிக் கொள்வது மட்டுமன்றி இலங்கை முஸ்லிம்களையும் நம்பி ஏமாறுமாறு வற்புறுத்தும் செய்கையில் பொதிந்திருக்கும் இரகசியம் என்ன?

ACJU வினருக்கு இலங்கை முஸ்லிம்களுடன் தனிப்பட்டதொரு கோபம் இருக்கிறது.

அதென்ன கோபம்?

பொது பலசேன என்ற தீவிரவாத பௌத்த அமைப்பு ஹலால் தரச் சான்றிதழுக்கு எதிராக ACJU வுடன் முட்டிக் கொண்ட பொழுது ACJU எதிர்பார்த்திருந்த மக்கள் ஆதரவு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

ACJU வினரின் உள் இரகசியங்களை அறிந்திருந்த மக்கள் யாருக்குமே தமது ஆதரவை நல்காது அமைதி காத்தார்கள்.

ACJU வினரோ ஓடாத இடமில்லை.

அரசியல்வாதிகளென்றும், பௌத்த தேரர்களென்றும்,பள்ளிவாசல் ஜமாத்தினர்கள் என்றும் மாறி மாறி ஓடினார்கள்.மண்டியிட்டார்கள்.மன்றாடினார்கள்.

யாருமே கண்டுக் கொள்ளவில்லை.

இறுதியில் தமது தோல்விக்கு ஆயிரமாயிரம் நொண்டிச் சாட்டுக்களைக் கூறிக் கொண்டு அமைதியானார்கள்.

இப்பொழுது அப்பொழுது அவர்களுக்கு உதவாத அப்பாவி முஸ்லிம் மக்களை பழிவாங்க நல்லதொரு வாய்ப்பு கனிந்திருக்கிறது.

புனித மஸ்ஜிதுகள் இப்பொழுது முஸ்லிம் ஆண்களது ஓய்வு தளங்களாக மாறியிருக்கும் அவலத்தை பகல் நேரம் பள்ளிவாசல்களில் உறங்கும் மக்களைப் பார்த்தால் புரிந்துப் போகும்.

வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசல்களில் தங்கி ஓய்வுக் கொள்ள வரும் 'ஜமாத்தினரின்' உணவுத் தேவையை கருத்தில் கொண்டு இப்பொழுது எல்லாப் பல்லிவாசல்களிலும் பெரியதொரு அடுக்களை கட்டியிருப்பதும் நாம் அறிந்த இன்னுமொரு இரகசியம்.

இப்பொழுது பாக்கியிருப்பதோ மாடருக்கும் மடுவம் மட்டுமே.

இந்த வருட ஹஜ்ஜில் ACJU அதற்கான செயல் திட்டங்களையும் வகுத்து விட்டதாம்.

அந்த செய்கையின் எதிர் விளைவாக எதிர்காலத்தில் மாடருக்கும் மடுவங்களாக மாறி நிற்கின்ற பள்ளி வாசல்களை இழுத்து மூடுமாறு தீவிரவாத பௌத்தர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவது நிச்சயம்.

அவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பொழுது நமது தலைமைத்துவ ACJU முல்லாக்கள் இலங்கை முஸ்லிம்களைப் பார்த்து இப்படி சொல்லுவார்கள்.

"நீங்கள் நமக்கு 'ஹலால்' பிரச்சினையின் பொழுது உங்களது பூரண ஆதரவை தந்திருந்தால் உங்களுக்கு இன்று இப்படியானதொரு சோதனை வந்திருக்காது........எல்லாம் அவன் செயல்."

No comments:

Post a Comment