கஞ்சிக் கோப்பைக்குள் விழுந்த கண்ணீர்!!
இலங்கையை ஆட்சி செய்த கடைசிச் சிங்கள மன்னனாக கருதப்படும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை கொலைவெறியுடன் ஆங்கிலேயப் படைகள் துரத்தி வருகின்றன. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்த மன்னன் மகியங்கனை நகரை ஊடறுத்து அதற்கு அருகிலுள்ள சிறு கிராமமான பங்கரகமவுக்குள் நுழைகின்றான்.
அங்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவர் (பாத்திமா என அறியப்படுகின்றாள்) நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தார். மன்னனின் நிலையைக் கண்டதும் அங்கிருந்த பொந்து போன்ற அமைப்புள்ள பாரிய மரத்தின் மறைவில் ஒளிந்து கொள்ளுமாறு அப்பெண் மன்னனுக்கு சாடை செய்கிறாள். மன்னனும் மறைந்து கொள்கிறான்.
ஆவேசத்துடன் அங்கு வந்த ஆங்கிலேயர்கள் மன்னனைப் பற்றி அவளிடம் வினவுகின்றனர். அவளோ தெரியாதென கூறிவிடுகின்றாள். ஆத்திரம் மேலிட்ட ஆங்கிலேயப் படைகள் அவளை அங்கேயே பலியெடுத்து விட்டு சென்றுவிடுகின்றன.
வெளியில் வந்த மன்னன் உயிரிழந்து கிடக்கும் பாத்திமாவை பார்த்து ‘மா ரெக லே’ (என்னைக் காத்த இரத்தமே) என்ற வார்த்தையை பிதற்றியவனாக தேம்பித் தேம்பி அழுகின்றான். சிங்கள பழங்கதைகளில் ‘உயிர்காத்த உத்தமி’ என வர்ணிக்கப்பட்ட இப் பெண் செய்த தியாகத்திற்கு நன்றிக்கடனாக அந்த ஊரையே அப்பெண்ணின் குடும்பத்திற்கு மன்னன் எழுதி வைத்ததாக வரலாறு கூறுகின்றது. அதற்கான உயில் பத்திரம் 1956 வரை பதுளை கச்சேரியில் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது. உயில் எழுதிக் கொடுக்கப்பட்ட பங்கரகம பிரதேசத்திலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்ற மஹியங்கனை நகரில் அமைந்துள்ள சிறிய பள்ளிவாசல் அல்லது தொழுகை நடத்துமிடம் நாட்கணக்காக மூடிக் கிடக்கின்றது. எந்தச் ‘சாவியை’ கொண்டும் இதனை திறக்க முடியாமல் நாதியற்று நிற்கின்றது முஸ்லிம் சமூகம்.
முதலாவது கலவரம்
இலங்கையின் முதலாவது இனக் கலவரம் 1983 ஜூலைக் கலவரமல்ல. 1883 மார்ச் மாதத்தில் கொழும்பில் சிங்கள – கிறிஸ்தவ மதக் கலவரம் ஒன்று இடம்பெற்றது. இருப்பினும் இது ஏனைய பிரதேசங்களுக்கு பரவவில்லை. ஆனால் பாரிய அழிவுகளுக்கு வித்திட்ட முதலாவது இனக் கலவரம் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் 1915 மே மாதம் இடம்பெற்றதே என்பதை நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.
கம்பளைப் பள்ளிவாசல் விவகாரத்தை ஒட்டியதாக கண்டி காசல் ஹில் பள்ளிச் சூழலில் இக்கலவரம் வெடித்தது. அப்போதிருந்த பௌத்த மறுமலர்ச்சிவாதி ஒருவர் உள்ளடங்கலாக சிங்கள தலைமைகள் சிலர் வெளியிட்ட கருத்துக்களே இதற்கு மூல காரணமாக அமைந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் இக்கலவரம் கொழும்பு, புத்தளம் போன்ற பிரதேசங்களுக்கும் பரவியது.
இதன்போது, 4075 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றாகவும், சுமார் 350 கடைகள் எரிக்கப்பட்டதாகவும் 86 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 17 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், 20 இற்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டதுடன் 180 இற்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளானதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதற்குப் பிறகு 1939 இல் சிறியளவான சிங்கள – தமிழ் கலவரமும் 1983 இல் கறுப்பு ஜூலைக் கலவரமும் நிகழ்ந்தேறின.
இச்சம்பவங்களை நன்றாக கவனிக்க வேண்டும். இலங்கையின் முதலாவது இனக் கலவரமே பள்ளிவாசலை மையமாகக் கொண்டுதான் ஏற்பட்டுள்ளது. அதுவே மேற்சொன்ன துரதிர்ஷ்டவசமான அழிவுகளுக்கும் இட்டுச் சென்றது.
இந்த வரலாற்று உண்மையில் இருந்து பாடம் படிக்காமல், சிறுபான்மை மக்களின் குறிப்பாக மத ரீதியாக மிகுந்த உணர்வு மேலீடு உள்ளவர்களான முஸ்லிம்களின் அடையாளங்களை இலக்கு வைத்து போராடுவதன் பாரதூரத்தையும் பள்ளிவாசல்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்குவதில் உறைந்திருக்கின்ற அநீதியிழைப்பையும் கணக்கெடுக்காமல் சிங்கள கடும்போக்கு சக்திகள் நடந்து கொள்வது ஏனென்றுதான் புரியுதில்லை.
பள்ளிக்குப் பூட்டு
மஹியங்கனையில் முன்னர் பள்ளிவாசல் என்று அழைக்கப்பட்டதும், பின்னர் சிறிய தொழுமிடம் என வரையறை செய்யப்பட்டதுமான ஒரு மதஸ்தலத்தின் உள்ளே பன்றியின் இரத்தம் வீசப்பட்டு, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு கடைசியில் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பான சம்பவங்களை கோர்த்துப் பார்க்கின்றவர்களுக்கு, ஏதோவொரு நோக்கத்திற்காக எல்லாமே நன்றாக திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள அவ்வளவு நேரமெடுக்காது.
பெரும்பான்மையாக சிங்களவர்களை குடியிருப்பாளர்களாக கொண்ட மஹியங்கனை நகரமானது மகா ஓயா – கண்டிக்கு இடையிலான ஏ26 நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்றது. ஏ26 நெடுஞ்சாலையில் கிழக்கு மாகாணத்திற்கும் மத்திய மாகாணத்திற்கும் இடையிலுள்ள ஊவா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பிரதேசமாக இது உள்ளது. மத்திய மலைநாட்டில் மேல்நோக்கி பயணிப்பதற்காக அமைக்கப்பட்ட 17 ஊசி வளைவுகளின் (பெண்ட்) காரணமாகவே இந்நகரம் பிரபல்யமானது என்றே கூறவேண்டும்.
இங்கே நீண்டகாலமாக இருந்த ஒரு வழிபாட்டிடம்தான் இப்போது மூடுவிழா கண்டுள்ளது. இந்த இடம் தொடர்பில் இருக்கும் மாற்றுக்கருத்துக்களும் விளக்கமின்மைகளும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நம்பகமான தகவல்களின் பிரகாரம், இது வக்பு சபையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ பள்ளிவாசல் அல்ல என்றே தெரிகின்றது. ஆனபோதும், தொழுவதற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு இடம் என்பதை மறுதலிக்க இயலாது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வேடுவ பழங்குடியினரின் தலைவரான ஊருவடுகே வன்னியத்தோவின் வார்த்தைகளில் பல நிதர்சனங்கள் மறைந்துள்ளதை குறிப்பிட்டாக வேண்டும். ‘தான் அறிந்த காலத்தில் இருந்து முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்று பங்கரகம்மன பிரதேசத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் வாழும் 23 ஜாதிகளும் தங்களுக்கு விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமையுடையவர்கள்.
எனவே, முஸ்லிம்களும் அப்பள்ளிவாசலிலேயே மதவழிபாட்டை மேற்கொள்ளலாம். அதற்கு மேலதிகமாக, மூன்று முக்கிய பௌத்த ஸ்தலங்களுக்கு நடுவில் நகரில் ஒரு பள்ளிவாசல் தேவையில்லை’ என்ற அர்த்தப்பட அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரது கருத்தின்படி, மஹியங்கனை பெரும்பாகத்திற்கு அருகில் பள்ளிவாசல் ஒன்று நீண்டகாலமாக பங்கரகம்மனவில் இருந்துள்ளது. அப்படியானால் முஸ்லிம்களும் வாழ்ந்து இருக்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது. ஆனால், யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற கருத்தில் உடன்படுகின்ற இனங்களின் தொன்மையறிந்த வேடுவ தலைவருக்கு, மூன்று பௌத்த தலங்களுக்கு நடுவே – ஒதுக்குப்புறமாகவேனும் முஸ்லிம்களுக்கான ஒரு வழிபாட்டிடம் இருந்துவிட்டுப் போகட்டுமே என்ற நல்லெண்ணம் ஏன் வரவில்லை என்பது அளவுகடந்த ஆச்சரியத்திற்குரியது.
அப்படியாயின் இவர்களது ‘மதங்களை பின்பற்றும் உரிமை என்பது’ 3 இற்கு 1 என்ற விகிதத்திலும் சிறுபான்மையினரின் அடையாளம் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்த திராணியற்றதாகவே உள்ளது.
சந்திக்க முயற்சிகள்
மஹியங்கனை விவகாரம் புனித நோன்பு காலத்தில் முடுக்கிவிடப்பட்டதாலோ என்னவோ, முஸ்லிம் தலைமைகளுக்கு சற்று சூடும் சுரணையும் சமூகப்பற்றும் அதிகரித்திருந்ததை காண முடிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலித்த குரல்கள், ஒருமித்த குரலாக ஒலிக்க தலைப்பட்டன. ஏனென்றால், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதோ அல்லது இன்னபிற சமய அடையாளங்களின் மீதோ இனவாதிகளும், கடும்போக்கு சிங்கள அமைப்புக்களும் குறிவைப்பது இது முதற்தடவையல்ல. கடைசித் தடவை என்பதற்கான உத்தரவாதமும் இல்லை.
எனவே, சில முக்கிய அமைச்சர்கள் அரச தலைமையிடம் நிலைமையை எடுத்துக் கூறினர். இது அரசுக்கு அபகீர்த்தியைக் கொண்டுவரும் என்றுரைத்தனர். இதனை திறப்பதற்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொண்டனர். சில திருப்தியுறா பதில்களுடன் சந்திப்புக்கள் முடிவுற்றன.
இவ்வாறான ஒரு சந்திப்பில் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கள் மிகுந்த அவதானத்திற்குரியன. அதாவது “இந்தச் சின்ன சின்ன விடயங்களை எல்லாம் ஏன் பெரிதுபடுத்துகின்றீர்கள்? முஸ்லிம்கள் சிங்களவர்கள் விடயத்தில் செய்யும் தவறுகளை சிங்களவர்கள் தூக்கிப் பிடிப்பதோ பெரிதுபடுத்துவதோ கிடையாது” என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்களவர் ஒருவருக்கு முஸ்லிம் ஒருவர் செக்ஸ் படம் காண்பித்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததை உதாரணமாக அவர் எடுத்தியம்பியுள்ளார்.
ஜனாதிபதி குறிப்பிட்ட உதாரணம் போல நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும். சிங்களப் பெண் பிள்ளைகளை காதலித்து விட்டு கம்பிநீட்டுதல், வீட்டுக்கு தெரியாமல் கூட்டிக் கொண்டு நடத்துதல், கடைகளில் பணியாற்றுபவர்களிடம் தவறாக நடக்க முற்படுதல், சிங்களவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்தல்… என நிறைய சம்பவங்கள் இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை ஒருநாள், பாரிய பிரச்சினை ஒன்றுக்கான காரணியாக விளக்கம் தரப்படலாம். எனவேதான் பிற இனத்தவருக்கு எதிராக குரல் கொடுப்பதென்றால் முதலில் தங்களை சுத்தமானவர்களாக பேணிக் கொள்ள வேண்டும்.
சந்திக்க நேரமில்லை
மேற்சொன்ன பதில்களில் முஸ்லிம் மக்கள் திருப்தி கொள்ளவில்லை. அவர்கள் தமது தலைமைகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தனர். இந்தப் பின்னணியில் 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து ஜனாதிபதியைச் சந்தித்து இது விடயமாக பேசுவது என்று முடிவு செய்தனர். ஆயினும் இக்கூட்டத்திற்கே 15 பேர்தான் வந்திருந்தனர்.
எப்படியோ ஜனாதிபதியை சந்திப்பதென முடிவு எடுத்தாலும் அது தொடர்பாக மேல் மட்டத்திற்கு தெரியப்படுத்தப்பட்டாலும் அதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. சந்திப்பு ஒன்றுக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்பதற்கு அரசவரைமுறை ஒன்று இருக்கின்றது. முஸ்லிம் தலைமைகள் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கான நேரத்தை கேட்டிருப்பார்கள் என்று நம்பலாம். இருந்தபோதும் கூட்டாகப் போய் பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இது தேர்தல் காலம். ஊவா மாகாணத்தில் தேர்தல் நடைபெறவில்லை என்றாலும் சிங்கள மக்களின் வாக்குகள் மத்திய மற்றும் வடமேல் மாகாணத்தில் அரசுக்கு தேவையாக இருக்கின்றது. இதனை வைத்துப் பார்க்கின்றபோது முஸ்லிம்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக அரச தலைமை உணர்ந்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தி முஸ்லிம்களுக்கு சார்பாக செயற்பட்டால் சிங்கள கடும்போக்குவாத சக்திகள் அரசுக்கு எதிராக மக்களை திருப்பிவிடுவார்கள் என்ற அபாயநேர்வு சாத்தியத்தை அவர் அறிந்திருப்பார்.
எனவேதான், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை மேற்கொள்வதில் இருந்து அவர் தவிர்ந்து கொண்டார் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். ஆனால், ஒரேயொரு கடிதம் கள நிலைமைகளை தலை கீழாக புரட்டி விட்டிருக்கின்றது.
கடிதத்தின் கதை
மஹியங்கனை பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியதாக அரச ஊடகத்தில் செய்தி வெளியானது. அந்தக் கடிதத்தில், அங்கு ஒரு பள்ளிவாசலே இருக்கவில்லை. அவ்வாறான ஒன்றை அமைக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது ரண்முத்து கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் இயங்கிவரும் எனது நகைக் கடைக்கு உரியது. எனது குடும்பத்தினர் மத அனுட்டானங்களுக்காக இதனை பயன்படுத்தியபோதும் (பொதுவான) பள்ளியாக இயங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தின் உண்மைத்தன்மை பற்றி சிலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர். ஆனால், ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாகப்பட்டது – நம்பிக்கையாளர் சபைத் தலைவர் தனது மனச்சாட்சியுடனோ அல்லது அதனை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டோ அக் கடிதத்தை எழுதிக் கொடுத்திருக்க சாத்தியமுள்ளது என்பதாகும். அதேபோல், உயர்மட்ட அழுத்தங்களுக்கு தலைவர் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கவும் முடியாது.
ஆனாலொன்று, தலைவரின் கடிதமும் அதில் குறிப்பிட்ட விடயங்களும் உண்மையாயின் தனது சொந்தக் கடையில் பன்றி இறைச்சி வீசிய விடயத்தை ஏன் சமூகப் பிரச்சினையாக காட்ட வேண்டும்? கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்? என ஏகப்பட்ட கேள்விகள் ஏகத்துக்கு மேலெழுகின்றன.
இந்த இடத்தில் ஒரு பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல் இருக்கவில்லை என்றாலும், தொழுகை நடத்துமிடம் இருந்திருக்கின்றது என்பதற்கு தர்க்கவியல் ரீதியாக சிறியதொரு விடயத்தை முன்வைக்கலாம். அதாவது, பன்றி இறைச்சி, இரத்தம் வீசப்பட்டமையும் அங்கு தொழுகை நடத்தாதவாறு மூடப்பட வேண்டுமென அழுத்தம் கொடுத்ததில் இருந்துமே தெரிந்து கொள்ளலாம் – அங்கு முஸ்லிம்களின் ஏதாவதொரு வழிபாட்டிடம் இயங்கியுள்ளது என்பதை. தவிர, நகைக்கடைக்கு பன்றி இறைச்சி வீசும் அளவுக்கு இனவாதிகள் ஒன்றும் முட்டாள்களல்ல.
திராணியற்ற சமூகம்
புற்றுநோய்க்கு ஆரம்பத்தில் மருந்து கட்டுவதுதான் நல்லது. நாட்பட்ட புற்றுநோயை தீர்த்து வைக்க முடியாது. இனவாதமும் புற்றுநோய்தான். ஒரு புள்ளியில் ஆரம்பித்து மெல்ல மெல்ல முழு நிலப்பரப்பையும் சம்ஹாரம் செய்கின்றது. நாம் கண்ட யுத்தமே இதற்கு அத்தாட்சிதான்.
அப்படிப் பார்த்தால், தம்புள்ளையில் பள்ளிவாசல் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட போது முஸ்லிம் தலைமைகளும், அறிஞர்களும், சட்டத்தரணிகளும், படித்தவர்களும் தங்கள் தங்கள் பணியை சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையாக செய்திருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது. மஹியங்கனையிலுள்ள முஸ்லிம்களின் கண்ணீர் இந்த நோன்பு காலத்தில் கஞ்சிக் கோப்பைக்குள் விழுந்திருக்காது.
ஆனால், குட்டக்குட்ட குனிதலை ‘பொறுமை காத்தல்’ என்று பெயர் வைத்திருக்கின்ற அரசியல் தலைமைகளும் சமூக அமைப்புக்களும் சிங்கள கடும்போக்கு சக்திகளை தெளிவுபடுத்தவோ, சாமான்ய சிங்கள மக்களை அறிவூட்டவோ இல்லை. தங்களது ‘மீட்பர்கள்’ அரசியல்வாதிகளே. அவர்களே எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென முஸ்லிம் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது நடந்திருக்கும் – மக்கள் கடந்த தேர்தல்களில் மீட்பர்களை சரியாக தெரிவு செய்திருந்தால்.
முஸ்லிம் தலைமைகள் தேர்தல் காலத்திலும், திருமண வீடுகளிலும்தான் ஒன்றாக கூட்டுச் சேர்கின்றார்கள். மக்களுக்காக ஒருமித்து குரல் கொடுப்பது ராஜதுரோகம் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போல. மக்கள் பிரதிநிதிகள் தண்ணீருக்கு ஒன்றும் தவிட்டுக்கு ஒன்றும் இழுத்துக் கொண்டிருப்பதால் அச்சமூகம் இன்னும் தொடக்கப் புள்ளியிலேயே நிற்கின்றது.
அண்மையில் மகியங்கனை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பில் அமைச்சர்கள் சிலர் ரகசியமாக பேச்சு நடத்திக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் பாராளுமன்றத்தில் முழங்கிக் கொண்டிருந்தார். இன்னுமொருவர் அதே பாராளுமன்றத்தில் ‘மட்டக்குளியிலும், வெள்ளவத்தையிலும் பெண்கள் நடந்து போவது கண்கொள்ளாக் காட்சி’ என்று வர்ணித்துக் கொண்டிருந்தார்.
அதேபோல், இச்சமூகத்திலுள்ள அறிஞர்களும் சட்டத்தரணிகளும் வைத்தியர்களும் படித்தவர்களும், பொன்னாடைக்காக அலையும் கூட்டமும் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?
பத்திரிகையில் வரும் செய்தியைப் படிப்பது, ஒரு தேநீர் கடையில் குந்தி கதைப்பது, வீட்டுக்குச் சென்றால் ‘மானாட மயிலாட’, ‘அசத்தப்போவது யாரு’ என செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தாலாட்டில் தூங்கிப்போவது. யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இதுதான் முஸ்லிம் சமூகத்தின் உட்புற யதார்த்தம்.
இனியென்ன, அடுத்த பிரச்சினை வரும் வரைக்கும்…
அரசியல்வாதிகள் தேர்தலில் லயித்திருப்பார்கள்,
முஸ்லிம்கள் நோன்புப் பெருநாள் ஆடைக் கொள்வனவில் திளைத்திருப்பார்கள்.
இது விளம்பர இடைவேளை!
No comments:
Post a Comment