நாட்டின் நீதியமைச்சர் என்றுதான் பெயர், நாட்டில் அநீதிக்கும் பஞ்சமில்லை அவர் சார்ந்த சமூகத்திற்கு நடக்கும் அக்கிரமங்களுக்கும் குறைவில்லை, ஆனாலும் அவர் இருக்கிறார், இனியும் இருப்பார் இதையெல்லாம் தவிர்ப்பதற்கு முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், அதற்குள் ஏதாவது அரசியல் மாற்றங்கள் வந்து விடும், அதிலும் பாதிப்பேருக்கு முஸ்லிம் சென்டிமன்டும் “இவர்களையும் விட்டால் வேறு யார்தான் ” எனும் நியாயமான கேள்வியும் இருப்பதால் இந்த வகையறாக்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்வார்கள்.
இப்பதிவின் ஆரம்பமே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் முகச்சுளிவை சம்பாதிக்கலாம், ஆனால் உண்மையை மறைப்பதில் யாருக்கு என்ன லாபம்? இன்று ஒரு ஹக்கீம் நாளை ஒரு ஜுனைது என்று மாறி மாறி ஏமாற முடியாது. நமது சமூகத்தின் இருப்பிடங்களுக்குத் தேடி வந்து சமாதானம் சொல்லிப்போக அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. ரிஸானா நபீக் தலை வெட்டப்பட்ட அன்று தொலைக்காட்சியில் பாட்டுக் கச்சேரியில் கை தட்டச் சென்ற ஹக்கீம் மறக்கப்பட்டு விடுவார், சொந்த இருப்பிடங்களை விட்டுப் பேரினவாதம் முஸ்லிம் மக்களை துரத்தியடிக்கும் போது ஜனாதிபதி புகழாரம் பாடி, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, அனைத்து சமூகமும் சுமுகமாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறது என்று பறை சாற்றும் அதாவுல்லாக்கள் மறக்கப்பட்டு விடுவார்கள், பாவம் ரிஷாத் பதியுதீனும் ஓடியோடி இறுதியில் நோ லிமிட் கடை வரை சென்று நமது சமூகத்துக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டும் அறிக்கை விட்டுக்கொண்டும் இருக்கிறார்களே தவிர இதைப் பாராளுமன்றத்தில் இது வரை பேசினார்களா? இனியாவது பேசுவார்களா? பெளத்த தீவிரவாதத்தில் வெறும் 2 வீத பெளத்தர்களே ஊறிப்போயிருக்கிறார்கள் என்று வியாக்கியானம் பேசித் திரியும் எம் மார்க்க அறிஞர்கள், அரபு வித்துவான்கள், பேச்சாளர்கள், கொள்கைப் பரப்பும் இயக்கத் தலைவர்கள் எல்லாம் இலர்களைப் பேச வைப்பார்களா? சந்தேகம் தான்.
ஏனெனில் அடி மட்ட சமூகப் பிரச்சினைகளை மேல் மட்டத்தில் பேச முடியாத படி அரச இயந்திரம் பதவிப் பங்கீட்டை இவர்களிடம் பேரம் பேசி வைத்திருக்கிறது, இவர்கள் நடவடிக்கைகளும் சக்தியும் இறுக்கமாகக் கட்டிப்போட்டு வைக்கப்பட்டுள்ளது, ஆக மொத்தத்தில் சமூகத்துக்கான இவர்களது குரல்கள் சமூகத்தின் மத்தியில் ஓங்கி ஒலித்தாலும் ஒலிக்க வேண்டிய மேடையில் ஓடி ஒளிந்து விடும்.
முதுகெலும்பில்லாத நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலை இருப்பதன் தைரியத்தில் தான் என்றுமில்லாதவாறு இன்று இனவாதம் முஸ்லிம் சமூகத்தை அடக்கியாள நினைக்கிறது. தலைவர்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை என்பது தெரிந்தால் தொண்டர்களான சாதாரண மக்கள் தான் இனி சிந்திக்க வேண்டும்.
நாட்டின் சமத்துவத்தை இன ஐக்கியத்தை வலியுறுத்தும் பிற சமூகங்களோடு சேர்ந்தாவது நம் பிரச்சினைகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும், சர்வதேசம் நம்மை நன்கு அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறது, ஆனால் எல்லாம் தெரிந்தும் உறங்கிக்கொண்டிருக்கும் சமூகத்துக்கு சர்வதேசமும் என்னதான் செய்யும்?
இப்போது ரவுப் ஹக்கீம் எனும் நீதியமைச்சர் நாட்டைப் பற்றி (பாராளுமன்றத்திற்கு வெளியில் பேசும்) பேசும் நியாயம் :
நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை இன்னும் கட்டு மீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கம் ஸ்திரத்தன்மையை இழந்து பலவீனப்படுவதற்கு இடமளிக்க தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இனவாதத்தை தூண்டுவதன் மூலம் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த எத்தனிக்கும் அத்தகைய சக்திகளுக்கு எந்த வெளிச்சக்திகளிடமிருந்து உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வுத் துறையா இங்கு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
நேற்று (20) மாலை குருநாகல் நகரில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட பேராளர் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
வடமேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, தொழில் அதிபர் தஸ்லீம், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன,
நாங்கள் இந்த நாட்டில் கொழுந்து விட்டெரிகின்ற ஒரு பெரிய பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த சமகால பிரச்சினையை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எவ்வாறு அணுகப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்வீட்டு சில்லறைப் பிரச்சினைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாது, முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
இன்றுள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தோடு இருப்பதையே விமர்சனப் பார்வையோடு நோக்குகின்றனர். அவ்வாறான கட்டுரைகள் வெளிவந்தவண்ணம் இருப்பதைக் காணலாம். முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஒருவிதமான மௌன விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருப்பதாக நான் விமர்சனைக்குள்ளாகியிருக்கி
இந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் உரிய தீர்வுகளை கண்டுதர வேண்டும் என்று ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் கேள்விக்குட்படுத்துகின்ற காலத்தில் தான் நாங்கள் இருக்கிறோம்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் வீரியம் சம்பந்தமாக நிறைய கேள்விகளை தொடுக்கின்றார்கள். இந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? இது வெறும் அரசியல் பிரதிநிதிகளை உற்பத்தி செய்து உருவாக்குகின்ற வெறும் தொழிற்சாலையா எனக் கேட்கிறார்கள். இந்தக் கட்சியில் இருந்து மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படுபவர்களை சூறையாடிக் கொள்கிறார்கள். கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு அவ்வாறு அமைச்சுப் பதவிகளுக்கு சோரம் போனவொரு கூட்டம் இருக்கிறது.
இந்தக் கட்சியினுடைய அரசியல் பலம் முக்கியம் வாய்ந்தது. ஆனால் இந்தக் கட்சியின் மீது ஒரு சந்தேகப் பார்வை நிலவத்தான் செய்கிறது. வேறு கட்சியிலிருந்து வந்து மீண்டும் அடுத்த தேர்தலில் மாறி விடுவார்களா என்ற ஒரு சந்தேகம் இல்லாமல் இல்லை. இந்த நம்பிக்கை இடைவெளியினால் அதிகமாக சங்கடப்படுபவர்களாக நானும் எனது செயலாளர் நாயகமும் இருக்கிறோம். ஏனென்றால் எங்களது கட்சியின் ஒவ்வொரு அரசியல் உட்சபீட கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை பூதாகாரமாக வெடிப்பதுண்டு.
பிரச்சினைகளை கையாள்வதில் எங்களுக்குள்ளே தடுமாற்றம் இருக்கிறதா என்றும் யோசிக்கிறார்கள். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்திற்குப் பிறகு எத்தனையோ விடயங்கள் நடந்தாகிவிட்டன. குருநாகல் நகருக்கு அண்மையிலும் அவ்வாறானதொரு பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அதுபற்றி நாங்கள் பாதுகாப்புச் செயலாளருடன் கதைத்தோம்.
போதாக்குறைக்கு பலசேனா என்ற ஒன்று இப்பொழுது பல இடங்களில் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளது. மஹரகமயில் ஒரு நவீன ஆடை விற்பனை நிலையத்தின் மீது ஆர்ப்பாட்டம் தொடுக்கப்பட்;டது. ஹலால் சான்றிதழுக்கும் புடைவை விற்பனை நிலையத்திற்கும் என்ன சம்ந்தம் இருக்கிறது?
இது முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகின்ற முயற்சியாகும். இன ரீதியான பிரச்சினைகளை எதுவுமே அறியாத அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.
ஏனெனில், அரசியலமைப்பில் கருத்துச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிந்தனைச் சுதந்திரம், சமய வழிபாட்டுச் சுதந்திரம், ஆர்பாட்டம் செய்வதற்கான உரிமை என்பன எல்லோருக்கும் உள்ளது. ஆனால், இப்பொழுது நடக்கும் விடயங்களை ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் எவ்வாறு கையாள வேண்டும். இன்னொரு சமூகத்தோடு மோதலை உருவாக்குவதற்கு, வலிந்து சண்டையை வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்படும் இந்த விஷமத்தனமான விடயங்களை கருத்துச் சுதந்திரம் சிந்தனை சுதந்திரம் என்பவற்றின் பெயரில் செய்வதற்கு தடை விதிப்பதற்கு அரசியல் அமைப்பிலேயே அரசாங்கத்திற்கு இடம் இருக்கிறது.
அதை செய்யாது, இவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பெரும் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள சக்திகளுக்கு ஏதாவது ஒத்தாசை வழங்கப்படுகிறதா எனக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
30 வருடமாக நீடித்த யுத்தத்தை வென்ற ஜனாதிபதிக்கு சமாதானத்தை ஏற்படுத்த எத்தனையோ உயிர்களை பறிகொடுத்த பின்னர் பெற்ற வெற்றியின் பின்னர் மீண்டும் இன்னுமொரு பாரிய அனர்த்தத்திற்கு வழிகோலுவதற்கு இடமளிப்பதா என்பதுதான் இன்று எழுந்துள்ள கேள்வி. பலவீனமானவர்களை பாதுகாக்க முடியாத ஓர் அரசாங்கமே அல்ல என நான் முன்னரே விமர்சித்திருக்கிறேன்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதே கேள்வியை மீண்டும் எழுப்ப வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். இனிமேலும் சகித்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்கு எந்த அடிப்படையும் இல்லாத மனிதனுடைய மதி நுட்பத்தை அவமதிக்கின்ற விதத்தில் ஒரு கூட்டம் இடத்திற்கு இடம் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.
நாளையே இந்த நாட்டை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கப் போகிறார்கள் என்ற தோரணையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லிம்களை வந்தான் வரத்தான்களாகவும், கள்ளத் தோணிகளாகவும் சித்திரிக்கின்ற ஒரு வழமையை நாங்கள் காண்கிறோம். இப்பொழுது அது கட்டுப்பாட்டை மீறியிருக்கிறது.
1914 இல் ஒரு கலவரம் மூண்ட போது அதன் உண்மையான அடிப்படை முஸ்லிம்களுக்கு இருந்த வியாபார மேலாதிக்கம் என்று கூறப்பட்டது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் என்பதற்காக கரையோரச் சிங்களவர்கள் தோற்றுவித்த ஒன்றாக அது நோக்கப்பட்டது. அது தொடர்பாக சேர். பொன்னம்பலம் இராமநாதன் லண்டன் வைட் ஹோலில் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு சார்பாக பேசினார் என்ற விஷயத்தைப் பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது.
அன்றைய ஆங்கில அரசாங்கம் அந்த கலவரத்தை அடக்குவதற்கு தனது முழு பலத்தையும் பிரயோகித்தது. எத்தனையோ கலகக்காரர்கள் சிறையில் இடப்பட்டதோடு கொலை செய்யவும் பட்டார்கள். அப்போது கூடிய அதிகாரத்தை ஆங்கில அரசாங்கம் பிரயோகித்தது என்பது இன்னும் ஒரு வடுவாக இருக்கிறது.
அன்று ஆரம்பித்த அதே விடயம் முஸ்லிம்களின் பொருளாதார ஆதிக்கத்தின் மீது இன்றும் மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் பெரும்பாலான முஸ்லிம்களில் வறுமை நிலையும், அவர்களில் அநேகர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என்பது தெரியாத விஷயமல்ல.
வேறெந்த சமயத்திலும் இல்லாத சகிப்புத் தன்மை இஸ்லாத்தின் உண்டு. அந்த சகிப்புத் தன்மையின் காரணமாகத்தான் இஸ்லாம் உலகளாவ வளர்ந்திருக்கிறது. அந்த உச்ச கட்ட சகிப்புத் தன்மையோடு தான் நாங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கின்றோம்.
இந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை ஒழித்து மறைத்து செய்யப்படுவது அல்ல, பகிரங்கமாகவே மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறிருக்க, தொடர்ந்து பொறுப்புவாய்ந்த அரசாங்கம் இந்த வியடத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
சட்டத்தையும் ஒழுங்கமையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பொலிசார் என்ன செய்கிறார்கள். புலனாய்வுத் துறை என்ன செய்கிறது? எங்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை இடைவெளி காரணமாக ஆவேசப்படாது பொறுமை காத்தோம். மதிநுட்பத்தோடு சில விடயங்களை அணுக வேண்டும் என்பதால் அவ்வாறு பொறுமை காத்தோம். ஒரு தவறான நேரத்தில் பேசி நாட்டுக்கோ நாட்டுத் தலைமைக்கோ சர்வதேச ரீதியாக அபகீர்த்தி ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் முயற்சி மேற்கொள்ளப்பட்ட பொழுது அரசை பாதுகாப்பதற்காக நாங்கள் அரபு நாடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டினோம். அதற்கு உரிய கைமாறு இதுதானா என்ற அடிப்படையில் நாங்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட
தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து கிழக்கில் நாங்கள் ஆட்சியமைக்க முன்வரவில்லையென்ற ஒரு விடயம் பற்றி கூறப்படுகின்றது. சேதமற்ற ஒரு விட்டுக்கொடுப்பை சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சேதாரமில்லாத ஒரு விட்டுக்கொடுப்பைச் செய்து இந்த இயக்கத்தை அழியவிடாது பாதுகாத்திருக்கிறோம்.
அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்திருக்கத்தக்கதாக எங்களது மன உணர்வுகளுக்கும் ஒரு பெறுமானம் வேண்டும் அல்லவா? ஒரு கனதி இருக்க வேண்டும் அல்லவா?
இத்தகைய சந்தர்ப்பத்தில் அதனை பிரயோகிக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் வந்திருக்கிறோம். அமைச்சர் பௌசியுடைய இல்லத்தில் ஒன்றுகூடி பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் நாளை பேசப்போகிறோம். ஆனால் மூடிய அறைக்குள் பேசிப் பேசி எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே. இப்பொழுது வெளிப்படையாகவே பேசியாக வேண்டிய கட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். இதை விடவும் காட்டமாக பேச முடியும். ஆனால் நிதானத்தை இழக்க விரும்பவில்லை.
இத்தகையை முஸ்லிம் விரோத நடவடிக்கை இன்னும் கட்டு மீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கம் ஸ்திரத்தன்மையை இழந்து பலவீனப்படுவதற்கு இடமளிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த இந்த சக்திகள் முயல்கின்றன. எங்கிருந்து, எந்த வெளிச்சக்திகளிடமிருந்து இந்த சக்திகளுக்கு உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வுத் துறையா இங்கு இருக்கிறது? அவ்வாறானால் எங்களது புலனாய்வுத் துறை எதற்காக இருக்கிறது?
30 வருடங்கள் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் தடுமாறிய ஒரு நிலையில் மூன்று வருடங்களுக்குள் அதனை முடித்து வைத்த இந்த ஜனாதிபதிக்கு ஒத்துழைத்த இராணுவ புலனாய்வுத் துறையும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றன? என மக்கள் கேட்க தலைப்பட்டிருக்கிறார்கள்.
ஜனநாயக உரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பயன்படுத்தி விஷமத்தனமாக இனக்கலவரத்தை ஏற்படுத்த எத்தனிக்கும் சக்திகளின் பின்னணியில் செயல்படும் வெளிச்சக்திகளை கண்டுபிடித்து கட்டுப்படுத்த ஏன் முடியாது என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து இந்த கேள்வி எழுகின்றது.
இதைவிட காணிப் பிரச்சினையை குறிப்பாக வடகிழக்கில் பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றது. அதனை நிதானமாக கையாளவேண்டியிருக்கின்றது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சிலர் அதனை தங்களுக்கு புள்ளிகளை போட்டுக்கொள்வதற்காக அதனைச் சிக்கலாக்கி இருக்கிறார்கள். அது ஒருபுறம் இருக்க புதிய உள்ளுராட்சித் தேர்தல் நடைமுறை சிறுபான்மை கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை குறிப்பாக வடகிழக்கிற்கு வெளியே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மிகவும் சமயோசிதமாக நடந்துகொண்டு அவற்றில் எமது பிரதிநிதித்துவத்தை எவ்வாறு கூட்டிக்கொள்ளலாம் என்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் குருநாகல் மாவட்டத்தின் மாறி மாறி வந்த மாகாண சபைத் தேர்தல்களில் உறுப்பினர்கள் இருவரை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதில் நாங்கள் வெற்றி கண்டிருக்கிறோம். இதனால் இந்த மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு தனியான முகவரியை எங்களால் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.
முரண்பாடுகள் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. அதனை முற்றாக இல்லாமல் செய்துவிட முடியாது. விமர்சனங்கள் வேண்டும், அத்தகைய விமர்சனங்கள் திறந்த தன்மை கொண்டனவாகவும் இருக்க வேண்டும். தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம் விமர்சனங்களை ஜீரணிக்க கூடியத் தன்மையாகும். ஏனென்றால் விமர்சனங்களின் ஊடாகத்தான் கட்சி புடம்போடப்படுகின்றது. நயவஞ்சகத்தனம் கூடாது. நபிகள் நாயகம் முஹம்மத்; (ஸல்) கூட நயவஞ்சகத்திற்கு அஞ்சியிருக்கிறார்கள்.
நன்றி: Sonakar Web
http://www.sonakar.com/
No comments:
Post a Comment