Wednesday, May 8, 2013

* அணிந்து கழற்றும் ஆடையல்ல நாட்டுப்பற்று !

கிரிக்கட் விளையாட்டு ஒன்று வந்து விட்டால் திடீரென நாம் இலங்கையர் நமது அணி இலங்கை அணி என்று சமூகத்தில் ஒரு சாரார் பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர், இப்போது சுதந்திர தினம் வருகின்றது எனவே நாட்டுப்பற்றை எவ்வாறு காட்ட வேண்டும் என்று பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களுக்கு இணையமெங்கும் இது தான் நடக்கப் போகிறது. அவரவர் தன் பங்கிற்கு நாட்டுப்பற்றை விளம்பரம் செய்யவும், நாட்டுப்பற்று எனும் சிந்தனையை விதைக்கவும் பல்வேறு வழிகளில் முயற்சி செய்யப் போகிறார்கள்.

ஒரு நாட்டின் குடி மக்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்றால் அதன் அரசாங்கம் தான் முதலில் வெட்கப்பட வேண்டும் !

சிறு வயதில் முடிந்த அளவு புகட்டப்பட்டாலும் வயதுக்கு வந்து தன் அறிவைக் கொண்டு ஒப்பிடும் ஒரு குடிமகனுக்கு சுதந்திர தினம், கிரிக்கட் ஆட்டங்களின் போது நாட்டுப்பற்று இல்லாமல் போகிறது என்றால் அதில் பெரும் பங்கினை அவன் உணர்வுகள் வகிக்கின்றன. அந்த உணர்வுகளால் அவனோடு கலந்தாலோசிக்கும் மூளை எதைச் சொல்கிறதோ அதைச் செய்யத் துணிகிறான் (அது அமைதியாக இருப்பதாக இருந்தாலும் சரி).

இப்போது முஸ்லிம் சமூகத்துக்குள் நாட்டுப்பற்றைக் காட்டக்கோரும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இரு வகையாகப் பார்க்கப்படும். முதலாவது, ஏன் நாட்டுப்பற்றை விளம்பரம் செய்ய வேண்டும் அது மனதில் இருந்தால் போதாதா எனும் மிகச் சாதாரண கேள்வி, அடுத்தது, ஏன் எங்களிடம் நாட்டுப்பற்று இல்லாததனாலா நாட்டுப்பற்று வரவேண்டும் என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது? அல்லது இப்படி நாட்டுப்பற்றைக் காட்டித் தான் எமது இருப்பை நாம் நியாயப்படுத்த வேண்டும் எனும் அளவுக்கு பேரினவாதம் நம்மை அழுத்துகிறதா எனும் கேள்வி.

ஒரு புறத்தில் பெரும்பாண்மையானோர் இதைப் பேரினவாத அழுத்தமாகவே பார்ப்பதனால் இது உண்மையான நாட்டுப்பற்றையும் எவ்வளவு தூரம் சேதப்படுத்துகிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.

தேசப்பற்று இல்லாத ஒரு இலங்கை முஸ்லிமைக் கூட காண்பது அரிது, ஆனால் பேரினவாதத்தால் சூழப்பட்ட தேசியத்தை ஆதரிப்பதில் அவருக்கு கருத்து முரண்பாடுகளோ அல்லது விருப்பமில்லாமை கூட இருக்கலாம்.

தமிழ் சமூகம் புலியின் அடாவடித்தனத்தை விரும்பவில்லை என்பது உண்மை, அவர்களுக்கு எதிராக கொதித்தெழவும் இல்லை என்பதும் உண்மை, அதற்காக எந்த அரசு எது செய்தாலும் தேசப்பற்றைக் காட்டும் நிலையில் அவர்களில்லை என்பதும் உண்மை. ஏனெனில் அவன் விரும்பும் தேசம் அவன் விரும்பும் வடிவில் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை நிலைமை சற்று வித்தியாசமானது, அவர்களிடம் தேசப்பற்று தாராளமாக இருக்கிறது, இந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்பதால் அது பரம்பரையாகவே அவர்களது ரத்தத்தில் ஊறியிருக்கிறது, ஆனால் அதை எந்த அளவு தூரம் வெளிப்படுத்துவது என்பது தொடர்பாக சில தனிப்பட்ட வரையறைகளை அவனாகவே வகுத்துக் கொண்டிருக்கிறானே தவிர தேசப்பற்று இல்லாத இலங்கை முஸ்லிம்களை இலங்கையிலோ வெளி நாட்டிலோ கூட காண முடியாது.

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இலங்கையோடு கலந்ததாகவே அவன் எண்ணங்கள் இருக்க, அது நாட்டின் மீதான பற்றை அதிகரிக்கச் செய்யும் வண்ணம் நடந்து கொள்வது நாட்டினை ஆளும் தேசிய அரசு மீதான பொறுப்பாகிறது.

அதற்காக தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டாம், பிரதியமைச்சர்கள் வேண்டாம், இப்தார் நிகழ்வுகள் வேண்டாம் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை உடனுக்குடன் அடக்கினாலே போதுமே!

ஆயினும், அரசியல் வியாபாரிகள் இதில் திறந்த மனதுடன் இல்லை, இலங்கைப் பிரஜைகளான முஸ்லிம்கள் இலங்கை மண் மீது பற்றுடன் இல்லை எனவே அவர்கள் பற்றைக் காட்டச் சொல்லுங்கள் என ஏவி விட்டு இவர்களை பற்றை விளம்பரப்படுத்தக் கேட்கும் படி பேரினவாதம் சொல்கிறதானால் ஏற்கனவே அது ஒரு முடிவோடு இருக்கிறது எனவே அதைத் திருப்திப் படுத்துவது எனும் பெயரிலே அடிமைப்படுத்தப்படுகிறோம்.

இல்லை நாம் தான் கொதித்தெழுந்து சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நல்லிணக்கத்திற்காக இதையெல்லாம் எம் சமூகத்திடமே செய்யக் கேட்கிறோம் என்றால் அது எம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வதாகிறதாகிறது.

வீட்டை மறந்தவனுக்குத்தான் வீட்டை ஞாபகப்படுத்த வேண்டும், மறக்காதவனை மறந்ததாக நினைத்துப் பிரச்சாரம் செய்வது அவன் மீது புரியப்படும் அத்து மீறலாகப் போய் விடுகிறது.

கடந்த காலங்களிலும் இது நடைபெற்றது, இப்போது சுதந்திர தினம் வருகிறது, இனியும் நடக்கும் ஆனால் தன்னோடு முப்பது வருடங்களாகப் பழகிய ஒரு நண்பன் திடீரென கொடியைப் பிடித்து பற்றைக் காட்டுவதைப் பார்த்துப் பேரினவாதி சிரிப்பானே ஒழிய ஏற்றுக்கொள்ள மாட்டான்.

எனவே, அவன் மனதை மாற்றுவதற்கு முயற்சிப்பதை விட நமது மனங்களைத் திருத்திக் கொள்வதும் நம்மை நாமே தரம் தாழ்த்த எம்மைப் பணிக்கும் பேரினவாதத்தின் மனதை திருத்தச் செய்வதற்குமான வழிமுறைகளைக் கையாளலாம்.

அடிப்படையில், சிறு வயது முதலே நாம் ஏதோ வெளி நாட்டிலிருந்து வந்து நேற்றுத்தான் குதித்த சமூகம் எனும் தொனியில் கற்பனைப் பாடங்களை நடாத்துவதை முதலில் தவிர்க்க வேண்டும், அந்த மண்ணில் நமது பாரம்பரியம், வரலாறு அத்தனையுமே எப்போதுமே அந்த மண் சார்ந்தது என்பதைச் சரிவர புகட்ட வேண்டும்.

மகாத்மா காந்தியின், நேதாஜியின், சந்திரபோஸின் சுதந்திரப் போராட்ட வரலாறுகள் அளவுக்கு இலங்கையில் சுதந்திரப் போராட்டம் உக்கிரமானதாக இருக்கவில்லை, ஆனாலும் போராட்டம் நடக்கத்தான் செய்தது, அந்தப் போராட்டங்களில் பங்களித்த முஸ்லிம்களின் வரலாறு ஏன் திட்டமிட்டு அழிக்கப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது என்று கேள்வி கேட்டு அவற்றை மீள நிறுவ வேண்டும்.

இனவாதத்தை பிரித்தானியர் தூண்டிவிட்ட போதும் கூட அதற்கும் மேலாக நின்று தேசப்பற்றைக் காட்டிய, ஒன்றாக இருந்து போராடிய முஸ்லிம் தலைவர்களின் வரலாறுகள் புகட்டப்பட வேண்டும். இந்த மண் முஸ்லிம்களின் சொந்த மண் என்பது அவன் அடிப்படையில் அறிந்த உண்மையாக இருக்க வேண்டும்.

தமிழர்களெல்லாம் இந்தியாவுக் ஓடு ; முஸ்லிம்களெல்லாம் அரேபியாவுக்கு ஓடு எனும் தொனியில் பேரினவாதம் பேசுகின்ற போதும், கலாச்சார ரீதியில் வேறுபட்டு நிற்கின்ற போதும் நாம் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் இல்லையோ எனும் சிறு சந்தேகம் அவன் மனதுக்குள் எழுவதில் நியாயமிருக்கிறது, அதை அடக்குவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் அந்த வேற்றுமையுரைப்புகளைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்து அவர்களை அணுக வேண்டும், மாறாக நாம் அணுகுவதெல்லாம் அப்பாவியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டவனைத்தான் எனவே அவன் இறுதியில் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து அடிமை நிலையாக உணர்ந்து முடிவில் இருக்கும் தேசப்பற்றையும் சேர்த்தே இழக்கிறான்.

இலங்கை முஸ்லிம்கள் எனும் பொது அமைப்புக்குள் சோனகர்கள், மலேயர்கள், போரா மற்றும் வேறு சில மரபுப் பின்னணியைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். பேரினவாதம் கட்டுமீறிப் போய் நின்று படையெடுத்தாலும் இவர்களில் ஒரு பிரிவினர் கூட தம் ஆதி மூலங்கள் வாழ்ந்த நாடுகளால் ஒரேயடியாக அணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் ஏனெனில் காலா காலமாக இவர்கள் இலங்கை மண்ணிலே வாழ்ந்தவர்கள்.

அதயும் மீறி ஏதோ ஒரு சிறு குழு தானே என்று மலேயர்கள் ஜாவா சென்றாலும், மற்றவர்கள் தம் இனத் தொடர்புகளைக் கொண்டு குஜராத், பஞ்சாப் சென்றாலும், சோனகர்கள் எங்குமே செல்ல முடியாது ! ஏனெனில் நீங்கள் எங்கிருந்தும் இந்த நாட்டிற்குள் வரவில்லை !! இந்த நாட்டில் இருந்து தான் முஸ்லிம்களாக உருவாகினீர்களே தவிர நீங்கள் முஸ்லிம்களாக இன்னொரு நாட்டிலிருந்து இங்கு வரவில்லை ! அதுதான் உண்மை.

அரபுப் பெயர் வைத்ததனால் உங்களை அரேபியாவோ ஆங்கிலப் பெயர் வைத்துக்கொண்டதனால் உங்களை பிரித்தானியாவோ வாங்கோ வாங்கோ என்று அரவணைத்து அழைக்கப் போவதில்லை, நீங்கள் அடிப்படையில் இலங்கையர், இந்த தேசத்தின் மைந்தர்கள், சொந்தக்காரர்கள், பூர்வீகக் குடிகள் ! உங்களால் எங்குமே செல்லவும் முடியாது, செல்லவும் கூடாது.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை பசி கொண்ட பாசிசப் புலிகள் அடித்து விரட்டியபோது அம்மக்களால் புத்தளம், கண்டி, மாத்தளை என்று நாட்டிற்குள்தான் ஓட முடிந்தது, இன்றும் வாழ முடிகிறது, இன்று 25 வருடங்களாகி விட்டது எந்த நாடும் வந்து தனி விமானம் வைத்து உங்களை அழைத்துச் செல்லவில்லை, அழைத்துச் செல்லப் போவதும் இல்லை.

இதுதான் யதார்த்தம் ! சமூகம் கண்டிருக்கும் பின்னடைவுகளில் பிரதானமானது அரசியல் பின்னடைவு, ஏனெனில் அரசியல் ஒற்றுமை இல்லாது பிரிந்திருப்பதால் உங்களிடம் ஒருமித்த குரல் இல்லை. அடுத்ததாக மார்க்கப் பின்னடைவு, இன்று ஒரே இஸ்லாத்தைப் பின்பற்றினாலும் அதைப் பயிற்சி செய்யும் முறையில் பல் வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்கிறீர்கள், நின்று கொண்டு ஆராய்ச்சி செய்து நல்லதைக் கண்டுகொள்வது வேறு நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வது வேறு.

பகிரங்க விவாதங்கள் என்கிறீர்கள், பள்ளி நிர்வாகங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருக்கிறீர்கள், ஒருவரை ஒருவர் இயக்க ரீதியாக நிந்தனை செய்து கொள்கிறீர்கள், எடுத்த எடுப்பில் எல்லோரும் மார்க்க விளக்கங்கள் அடிப்படையில் பிளவு பட்டுக் கொள்கிறீர்கள், சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் கொள்கை முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கிறீர்கள், இப்படி எல்லாவற்றையும் மீறி உங்களால் நாடு குறித்தும் உங்கள் இருப்பு குறித்தும் சிந்திக்க நேரமும் இருப்பதில்லை, அரசியலில் உங்கள் பிரதிநிதித்துவத்தின் பலம் குறித்த தூர நோக்கும் இல்லை.

இந்தியாவில் தலித் என்று முத்திரை குத்தப்பட்ட மக்கள் கூட இஸ்லாம் எனும் ஆடையை அணிந்த மறு கணமே சாதிப் பிரிவினை இல்லாமல் போனது என்று பெருமிதம் கொள்கிறார்கள், அந்த அளவுக்குப் பிரிவினையை வெறுத்து சமவுரிமையைப் போதிக்கும் மார்க்கம் இஸ்லாம் ! ஆனால் இன்றைய சமூக நிலையோ இஸ்லாத்தில் யார் சரி பிழை என்று பார்த்துக்கொண்டு சமூக ரீதியாகத் தம்மைத் தாமே பலவீனப்படுத்திக் கொள்கிறது.

முஸ்லிம்களின் சமூக பலவீனமே பொது பல சேனா போன்ற பேரினவாதிகளின் பலம் ! உங்களின் அரசியல் பலவீனமே பேரினவாதத்தை ஆதரிக்கும் அரசின் சதுரங்க ஆட்டம் ! இறுதியில் பதவிகளுக்காகக் காத்துக் கிடக்கும் நிலையில், அப்பதவிகள் மீள நிர்ணயிக்கப்படும் வரை சமூகப்பிரச்சினைகளில் கூட வாய் திறக்க முடியாத நிலையில் தான் நம் அரசியல் நிலை இருக்கிறது ! இந்த வங்குரோத்தின் வடிவம் தான் சந்தர்ப்பங்கள் வரும் போது நாம் நாட்டுப்பற்றை வாங்கும் – விற்கும் பேரவலம்.

நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டமே !

- மானா

http://www.sonakar.com/

No comments:

Post a Comment