Tuesday, May 7, 2013

* கொதித்தெழுந்த அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனிகளாகிவிட்டார்கள்--சட்டத்தரணி அமானுல்லாஹ்



பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது கொதித்தெழுந்தார்கள். ஓடி வந்து எமக்கு ஆறுதல் வழங்கினார்கள். ஆனால் எமக்கு ஆறுதல் வழங்கிய முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செயவில்லை. கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்த அவர்கள் தேர்தலின் பின்பு வா மூடி மௌனியாகி விட்டனர். அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளை எதிர்பார்த்து பயந்து போவிட்டார்களோ என்று எமக்குச் சந்தேகமாக உள்ளது.

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது கொதித்தெழுந்து எமக்கு ஆறுதல் கூறிய முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பு பள்ளிவாசலுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செயவில்லை. அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளை எதிர்பார்த்து பயந்து போவிட்டார்களோ என்று எமக்குச் சந்தேகமாக இருக்கிறது என ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் சட்டத்தரணி புஹாரிதீன் அமானுல்லாஹ் தெரிவித்தார்.

தம்புள்ளை பள்ளிவாசலின் கள நிலைமை தொடர்பில் ‘விடிவெள்ளி’ மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டத்தரணி அமானுல்லாவுடனான நேர்காணலின் முழுமையான விபரம் வருமாறு:

விடிவெள்ளி: தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டு 6 மாதங்களாகின்றன. தற்போது வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக பள்ளிவாசலின் ஒரு பகுதி அகற்றப்படவுள்ளதாக சொல்லப்பட்டுகிறது. இதன் தற்போதைய நிலைமை பற்றி தெளிவுபடுத்துவீர்களா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : பள்ளிவாசலில் அன்றாட சமய அனுஷ்டானங்கள் தொடராக நடைபெற்று வருகின்றன. ஆனால் மக்கள் மத்தியில் பீதியும், கவலையும் தொடர்ந்தும் குடிகொண்டுள்ளன. சந்தோஷமாக மனநிறைவுடன் சம்பவத்துக்கு முன்பு தொழுத மக்கள் இன்று கவலையில் உறைந்துவிட்டார்கள். பள்ளிவாசல் பாதை அபிவிருத்தி என்ற போர்வையில் காவு கொள்ளப்படப்போகிறது என்ற கவலை, பள்ளிவாசலின் நிச்சயமற்ற தன்மை என்பன இங்குள்ள முஸ்லிம்களை துயரத்தில் ஆழத்தியுள்ளது.

இப்பள்ளியில் வெள்ளிக்கிழமைகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் ஜும்ஆ தொழுகையில் ஈடுபடுகிறார்கள். வெளியிடங்களிலிருந்தும் பக்கத்து ஊர்களிலிருந்தும் ஜும்ஆவுக்காக மக்கள் வருகை தருவதாலேயே இத்தொகை அதிகரித்துள்ளது. பள்ளிவாசலில் இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளிவாசலுக்கு வெளியே திறந்த வெளியிலும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். ஏனைய தொழுகைகளில் 30 பேர் வரை ஜமாஅத்தாக ஈடுபடுகிறார்கள். பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களாக 70 குடும்பங்கள் பதிவு செயப்பட்டுள்ளன.

விடிவெள்ளி: பள்ளிவாசலின் இருப்பு தொடர்பில் பரிபாலன சபை என்ன நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது?

சட்டத்தரணி அமானுல்லாஹ்: பள்ளிவாசல் இதே இடத்தில் இருக்க வேண்டுமென்பதே பரிபாலன சபையின் நிலைப்பாடாகும். மக்கள் அமைதியாக, நிம்மதியாகவே தொழுகைகளில் ஈடுபட வேண்டும். பள்ளிவாசல் வேறு இடத்துக்கு இடமாற்றம் செயப்பட்டால் அப்பகுதியிலும் முஸ்லிம்களின் சமய வழிபாடுகளுக்கு சவால்கள் உருவாகலாம். பள்ளிவாசலில் தராவீஹ் மற்றும் பயான்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படலாம். இந்தப் பள்ளிவாசலுக்குப் பின்புறத்தில் அரசாங்கத்துக்கு சோந்தமான பெரிய காணி இருக்கிறது. உண்மையில் இப்பகுதி ஒரு புனித பூமிக்குரியதல்ல. புனித பூமி என்று அவர்களாகவே பெயர் சூட்டிக் கொண்டுள்ளார்கள். பள்ளிவாசலுக்குப் பின்னாலுள்ள காணியை பள்ளிவாசலுக்காக வழங்கலாம்.

விடிவெள்ளி : பள்ளிவாசலைக் காப்பாற்றிக் கொள்ள நிர்வாக சபை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

சட்டத்தரணி அமானுல்லாஹ்: பள்ளிவாசல் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையே தாக்குதலுக்குள்ளானது. பள்ளிவாசலைத் தாக்க வருவதாக இனாமலுவ தேரர் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனவே இதுபற்றி எமது நிர்வாக சபை ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர்,பிரதிப் பொலிஸ் மா அதிபர், தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தது.

பள்ளிவாசலை தாக்குவதற்கு வரவுள்ளார்கள் என்று தம்புள்ளை பொலிஸில் நிர்வாக சபையினாலும் தனிப்பட்ட ஒருவர் மூலமும் முறைப்பாடுகள் செயப்பட்டன. பள்ளிவாசல் தாக்கப்பட்ட பின்பும் பொலிஸில் முறைப்பாடு செயப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற பின்பு இனாமலுவே தேரர் ஆறு மாதங்களின் பின்பு பள்ளிவாசலை அகற்றுவதாக சவால்விட்டிருந்தார். இது பற்றியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

வக்பு சபை, முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. பள்ளிவாசல் சேதம் தொடர்பான விபரங்கள் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபைக்கு வழங்கப்பட்டது. பயப்பட வேண்டாம் பள்ளிவாசலுக்கு ஆபத்து வராது என்று அமைச்சர்களும் உலமா சபையும் தெரிவித்தது.

தொடர்ந்து பரிபாலன சபை பள்ளிவாசல் தொடர்பில் ஆராந்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடாத்துகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கூட ஒன்று கூடி இதுபற்றி கலந்துரையாடினோம்.

விடிவெள்ளி : தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள், கடைகள் அப்புறப்படுத்தப்படவுள்ளன?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : இப்பகுதியிலுள்ள 52 வீடுகளுக்கும், 12 கடைகளுக்கும் கண்டலம வீதியில் பொல்வத்த எனும் இடத்தில் காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பு காணிகளை ஒப்படைக்கும் படியும் நகர அபிவிருத்தி அதிகார சபை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் திகதியிட்ட 17/DM/937ஆம் இலக்க கடிதத்தில் இரு வாரங்களுக்குள் பொல்வத்தயில் காணி வழங்கப்படும் எனவும் அதற்குள் அங்கு இடம்பெயர தேவையான ஏற்பாடுகளைச் செது கொள்ளும்படியும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும் இரு வாரங்கள் கடந்து விட்ட நிலையில் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பொல்வத்த பகுதி காணி துப்பரவு செயப்பட்டுவருகிறது. இது யாரால் செயப்படுகிறது என்பது தெரியாது.

இங்கு மூவினங்களையும் சேர்ந்த மொத்தம் 72 குடும்பங்கள் இருக்கின்றன. நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து இடம்பெயர்வதற்கான கடிதம் அனுப்பப்படாத குடும்பங்களும் இருக்கின்றன. பள்ளிவாசலிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்துக்குள் இக்குடும்பங்கள் வாழ்கின்றன.

விடிவெள்ளி: பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என ஜனாதிபதி, அமைச்சர்கள் பைசர் முஸ்தபா ஏ.எச்.எம்.பௌஸி, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி ஆகியோர் உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால் அகற்றப்படாமலே வீதி அபிவிருத்திக்குள் பள்ளிவாசல் உள்வாங்கப்படப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதே?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : நகர அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் படி இந்தப் பள்ளிவாசல் பாதை அபிவிருத்தி என்ற போர்வையில் உள்வாங்கப்படவுள்ளது. 65 அடி அகலமான பாதை பள்ளிவாசல் கட்டிடத்தை ஊடறுத்துச் செல்லும் வகையிலேயே குறித்த திட்ட வரைபு அமைந்துள்ளது. அவ்வாறே நில அளவை மேற்கொண்டு எல்லை மற்றும் குறியீடுகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இடப்பட்டுள்ளன.

விடிவெள்ளி: பள்ளிவாசல் பாதை அபிவிருத்திக்குள் உள்வாங்கப்படவுள்ளதால் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கின்றீர்களா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : இல்லை. எமது சமூகத்துக்கு தன்மானம் என்று ஒன்றிருக்கிறது. அவ்வாறு புதியதோர் இடத்துக்குச் செல்வது முன்னுதாரணமாக இருக்கக்கூடாது. இச்செயல் ஏனைய இடங்களிலும் பள்ளிவாசல்கள் அகற்றப்படுவதற்கு இது உதாரணமாக அமைந்து விடும். அப்படி வேறு ஏற்பாடுகள் என்றால் ஜனாதிபதி இதில் தலையிட வேண்டும். எம்மிடம் சில கோரிக்கைகள் இருக்கின்றன. அவை கலந்துரையாடப்பட வேண்டும்.

தம்புள்ளையில் தற்போது பள்ளிவாசல் இருக்கும் இடத்திலிருந்து தூரவுள்ள இடத்துக்குப் போனால் அதில் பல சிரமங்கள் உள்ளன. தம்புள்ள சந்தையில் அதிக முஸ்லிம்கள் வர்த்தகம் செகிறார்கள். இவர்களது வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

விடிவெள்ளி: புதிய இடத்தில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டால் சமூகத்துக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படும் எனக் கருதுகிறீர்களா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : ஆம். புதிய இடத்தில் அதுவும் முஸ்லிம்களே வாழாத பகுதியில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டால் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். அதான் சோல்லல், நோன்பு கால இரவுத் தொழுகைகள் என்பன தொடர்பில் பெரும்பான்மைச் சமூகம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இன்றேல் தடைகளை உருவாக்கலாம்.

விடிவெள்ளி: முஸ்லிம் சமூகத்திடமிருந்து இந்தத் தருணத்தில் நீங்கள் என்ன உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : அல்லாஹ்விடம் துஆச்செயுங்கள். அது எங்களுக்குப் போதும். புதிய பள்ளிவாசல்கள் நிர்மாணிப்பதற்கு சமூகம் வாரி வழங்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இந்த இடத்திலே நாம் நிரந்தரமாக இருக்க வேண்டுமென பிரார்த்தியுங்கள். காடையர் கூட்டம் வானொலி மூலம் பிரசாரங்களை மேற்கொண்ட பின்பே பள்ளிவாசலை உடைக்க பேரணியாக வந்தது.

இந்த இடத்திலேயே நாம் தொடர்ந்து இருக்க வேண்டுமென்பது எமது தன்மானப் பிரச்சினையாகும். சமூகம் ஒட்டுமொத்தமாக எமது இருப்புக்காக குரல் கொடுக்க வேண்டும்.

விடிவெள்ளி: முஸ்லிம் அரசியல் வாதிகளின் நிலைப்பாடு திருப்தியளிக்கிறதா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : இல்லை. பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது கொதித்தெழுந்தார்கள். ஓடி வந்து எமக்கு ஆறுதல் வழங்கினார்கள். ஆனால் எமக்கு ஆறுதல் வழங்கிய முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பு ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செயவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பள்ளிவாசல் விவகாரத்தில் பெரும் பங்காற்றியிருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்த அவர்கள் தேர்தலின் பின்பு வா மூடி மௌனியாகி விட்டனர். அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளை எதிர்பார்த்து பயந்து போவிட்டார்களோ என்று எமக்குச் சந்தேகமாக உள்ளது.

விடிவெள்ளி: அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை உங்களுக்கு ஏதும் உத்தரவாதம் வழங்கியுள்ளதா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : ஆம், உலமா சபை தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது. பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது. இதே இடத்தில் இருக்கும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக சபை தொடர்ந்தும் அடிக்கடி கொழும்பு உலமா சபை காரியாலயத்துக்குச் சென்று கலந்துரையாடல்களை நடத்துவதுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

விடிவெள்ளி: சர்வதேச உதவிகளையும் ஆதரவுகளையும் எதிர்பார்க்கிறீர்களா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : இல்லை. எதிர்பார்க்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எமது பிரச்சினையை இங்கேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.சுமுகமான தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

விடிவெள்ளி: பள்ளிவாசல் தொடர்பான சம்பவம் பற்றி ஈரான் ஜனாதிபதி எமது நாட்டின் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு வினவியிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறதே?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : ஆம், இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் நீண்ட காலமாக சுமுகமான உறவு இருந்து வருகிறது. ஈரான் எமது நாட்டுக்கு பல உதவிகளைச் செதுள்ளது. இரு ஜனாதிபதிகளும் பள்ளிவாசல் தொடர்பில் உரையாடிக் கொண்டமை நிச்சயம் நன்மை பயக்கும்.

விடிவெள்ளி: இனாமலுவே தேரர் பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் தொடர்புகளை வைத்திருக்கிறாரா?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : தம்புள்ளை இனாமலுவே தேரருக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும் இடையில் நீண்ட காலமாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இத் தொடர்பு நெருக்கமானதாக ஆரோக்கியமானதாகவே இருந்தது. கண்டலமவில் உல்லாச பிரயாண ஹோட்டல் நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட நெருங்கிய உறவு இருந்தது. ஆனால் பள்ளிவாசல் சம்பவத்தினை அடுத்து அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. தேரருடன் பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு தற்போது எதுவித தொடர்பும் இல்லை. கதைத்துக் கொள்வதுமில்லை. அவர் மாறி விட்டார்.

விடிவெள்ளி: உங்கள் பிரதேச சிங்கள சகோதரர்களின் நிலைப்பாடு எவ்வாறிருக்கிறது?

சட்டத்தரணி அமானுல்லாஹ் : எங்களைச் சுற்றி வர பெரும்பான்மைச் சமூகமே இருக்கிறது. அவர்களால் முஸ்லிம்களுக்கோ, பள்ளிவாசலுக்கோ எதுவித பிரச்சினையுமில்லை. உறவுகள் தொடர்ந்தும் சுமுகமாகவே உள்ளன. காணி காணி சீர்திருத்த அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோனும் பள்ளிவாசல் தொடர்பில் எமக்கு சார்பான கருத்தினையே கொண்டுள்ளார். பள்ளிவாசல் 60 வருடங்களுக்கும் மேலாக அவரது தந்தையின் காலத்திலிருந்தே அவ்விடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசலை அப்புறப்படுத்துவதற்கு குறிப்பிட்ட தேரருடன் இணைந்துள்ள குழுவினரே அழுத்தங்களைக் கொடுத்து விடுகிறார்கள். சாதாரண மக்கள் இப்பகுதியில் சமய, இன வேறுபாடுகளை மறந்து வாழவே விரும்புகிறார்கள். சமூகத்தின் அரசியல் தலைவர்கள் பள்ளிவாசல் தொடர்பில் ஒருமித்து குரல் கொடுப்பதன் மூலமே பள்ளிவாசலையும் நம்மையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment