“அநுராதபுரத்தில் முஸ்லிம் பள்ளிவாயல் உடைத்து நொறுக்கப்பட்டது” – பாபர் மசூதி இடிக்கப்பட்ட அளவுக்கு பிரச்சாரத்தை முடுக்கி விட நன்மையடைய நினைக்கும் ஒரு கூட்டம் இணையங்களில் அலை மோதுகிறது.
இடிக்கப்பட்டது பள்ளிவாசலா? அப்படி அங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கவில்லையே என முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் அங்கலாய்த்துக்கொள்கின்றார்
இது எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் தரும் தீங்கினை அலசிப்பார்ப்பின், மீண்டும் ஒரு தடவை இனவாத அடக்கு முறைக்கான வித்திடல் அரங்கேறுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. அதைச் செய்தவர்கள் புத்த பிக்குகள் என்கிறது பி.பி.சி :http://www.bbc.co.uk/news/
இவ்விரண்டிற்கும் இடையில் இங்கு முக்கியம் பெறும் மேலதிக விடயங்கள் என்னவென்று பார்ப்பின் : முதலாவதாக, அநுராதபுரம் எனும் நகரத்தின் தொன்மையும், அது தொடர்பிலான உலக நோக்கும் முக்கியம் பெறுகிறது. இரண்டாவது, அம்மண்ணின் பாரம்பரியம் இங்கு தொலைக்கப்படுவது மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பாரிய சந்தேகங்களை உருவாக்கும் வகையான நடைமுறையாகவும் இது இருக்கப்போகிறது.
இதை எதிர்கொள்ள வேண்டியதும், இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதும் யார்? எனின், அது அரசாங்கம் என்பதும், இவ்வாறொரு அனர்த்தம் நடக்காமல் பாதுகாத்திருக்க வேண்டிய பொறுப்பு யாரிடம் இருக்கிறது? எனும் கேள்விக்குக் காவல்துறை (பொலிஸ்) என்பதும் மிக இலகுவான விடைகளாகும்.
எனினும், சமத்துவம் பேசப்புறப்பட்டிருக்கும் இலங்கை மண்ணில் இவ்வகையான அனர்த்தத்தை முன்நின்று நடத்தியது ஒரு பெளத்த பிக்கு என்றால், அதற்குப் பாதுகாப்பளித்துக் கை கொட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது காவற்துறை என்று கூறுகிறது பி.பி.சியின் செய்திக்குறிப்பு.
இங்கே இரண்டு உண்மைகள் எடுத்து நோக்கத் தகுதியாகின்றன:
அநுராதபுர முஸ்லிம்கள் இதனை காவற்துறைக்கோ அல்லது அதற்கு மேலோ கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பிட்ட சம்பவம் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடாத்தப்பட்டிருக்கிறது.
இவையிரண்டினையும் கருத்திற்கொண்டு பார்க்கும் போது கிறீ்ஸ் பூதம் எவ்வாறு இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளைக் கொன்று குவிக்கிறதோ அதே போன்று சமூக உரிமைகள் மீண்டும் மறுக்கப்படுவதற்கான ஆயத்தமாக இந்த சம்பவத்தினையும் எடுத்துக்கொள்ள முடிகிறது.
இவ்வாறு சமூகவியல் பயங்கரவாதத்திற்குள் உந்தப்படுவது மிகக்குறிப்பாக இலங்கையின் சிறுபான்மையினத்தவராக இருக்கும் அதே வேளை, தமிழர் – முஸ்லிம்களிடையே இருக்கும் விரோத உணர்வும், வெற்றிடமும் இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் என்பது ஐயந்திரிபட ஏற்றுக்கொள்ளக் கூடியது.
எனவே, இன ஒற்றுமை என்று வாய் கிழியப் பேசினாலும், அதை அடிப்படையாகக் கொண்டு இன வேற்றுமையை வளர்க்க ஆயத்தமாகும் நரிகளைக் கொண்டும் அநுராதபுரம் மற்றும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆயினும், ஜனநாயக ரீதியில் எம் உரிமைகளுக்காக நாம் போராடவும் தயாராக இருக்கிறோம் என்பதையும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமுதாயம் தெளிவாக்கத் தவறும் பட்சத்தில் இனி வருங் காலங்களிலும் இலங்கை இஸ்லாமியர்கள் இன அடக்குமுறைக்குள்ளாவதைத் தடுக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.
சிங்கள – முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் பல கிராமங்களில் அதிகாலை (பஜ்ர்) தொழுகைக்கான அழைப்பு தொடர்பில் பல காலங்களாக வேரூன்றியிருந்த சலசலப்புகளை இந்த அரசாங்கத்தின் தீவிர பெரும்பான்மை சார் நிலையைப் பயன்படுத்தி சில சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்பியமை காலம் நமக்குக் கற்றுத்தந்த வரலாறாகும். அப்போதும், முஸ்லிம் மக்களிடம் காணப்பட்ட சில கருத்துவேறுபாடுகளின் இடைவெளி, அதாவது ஒருமித்த கருத்துகள் காணப்படா நிலையை நன்கு உபயோகித்துக் கொண்ட பெரும்பான்மை இனவாத பூதங்கள் ஒரு சில இடங்களில் இதனை ஒரு சமூக சிக்கலாக உருவாக்கிப் பலன் கண்டனர்.
அதே வகையில், இனி வரும் காலங்களில் மெது மெதுவாக முஸ்லிம் மக்களின் வணக்கஸ்தலங்களில் கை வைக்கத் துணிவதற்கான ஆரம்பமாக அநுராதபுரத்தை ஆக்கிக்கொள்ளாமலிருப்பதும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மாபெரும் கடமையாகும்.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டிடத்தை 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதாரமற்ற வரலாற்றைக் கொண்டு இன்று ஒரு தம்ம தேரரால் இடிக்க முடிகிறது, அதற்கு பொலிஸ் அனுசரணையும் கிடைக்கிறதென்றால், சிங்களவர் வருகைக்கும் முற்பட்ட இலங்கைச் சோனகர்களின் பாரம்பரியங்கள் சிதைக்கப்படுவதற்கு பல தேரர்கள் உருவாவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்காது.
அதற்காக முஸ்லிம்கள், கடந்த கால தமிழர் வரலாற்றைப் போல ஆயுதமேந்தித்தான் தம் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனும் எந்த நிர்ப்பந்தமும் இலங்கை முஸ்லிம்களுக்கு இல்லை. அவ்வாறான ஒரு வரலாறு இதற்கு முன்னரும் தேவைப்பட்டதும் இல்லை. 1915 கலவரங்களிலும் ஒரு சில முரண்வாதிகளின் தவறு இருக்கிறது, இருந்தது, அதனை அப்போதைய தலைவர்கள் மிக அவதானமாகக் கையாண்டார்கள். அதே போன்று, நாளைய வரலாறு எழுப்பப்போகும் கேள்விகளுக்கு இன்றைய தலைவர்களே விடை தரும் கடமையுள்ளவர்களாக இருக்கப்போகிறார்கள்.
சந்தர்ப்பவாதிகளால் தூண்டப்படாத, அதே நேரம் தம் உரிமையைப் பாதுகாக்கும் தைரியமும், புத்திசாதுர்யமும் கொண்ட ஒரு இஸ்லாமிய சமூகம் இலங்கையில் இருக்க வேண்டும் எனில், அதனை வழி நடத்தும் அரசியல் தலைமைகள், மார்க்கத் தலைமைகள் முதல் அனைவரிடமும் நமது ‘இருப்பு’ தொடர்பான தெளிவான மன நிலை முதலில் இருக்க வேண்டும்.
அதற்கடுத்ததாக, எதையும் ஜனநாயக ரீதியில் போராடிப் பெறும் வல்லமையை அனைத்து வகை வழிமுறைகளிலும் எமது சமுதாயம் கொண்டிருக்க வேண்டும். இதற்காக அர்ப்பணிப்புடன் இயங்கக்கூடிய சட்ட வல்லுனர்கள் தம் சமூகத்திற்காக முன் வரவேண்டும். சட்ட திட்டங்களைக் கொண்டு சவால் விடும் அளவிற்கு நம் வரலாற்று ஆவணங்கள் நம் மத்தியில் காணப்பட வேண்டும், அது தொடர்பில் நமமு சமூகம் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும், கற்பிக்கப் பட வேண்டும்.
ஆனால், இதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்று நன்கு அலசி ஆராய்வின் இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்குள் பிராந்திய, பிரதேச, பழக்க வழக்க என்று ஆரம்பித்து பல்வேறு வகையான தவிர்க்கக்கூடிய இடைவெளிகள் நிரம்பிக் காணப்படுவதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
அதிலிருந்து நம் சமூகம் விடுபட வேண்டுமெனின், அதற்கான வழி காட்டல் அவர்களை சரியான முறையில் சென்றடைய வேண்டும்.
இந்தச் செய்தியில் உண்மையும், பொய்யும் கலந்திருக்கும் எனும் சந்தேகத்தில் இருப்போர் இந்த இணைப்பில் சில தகவல்களைப் படங்களுடன் பெற்றுக்கொள்ளலாம் : http://
அங்கே காணப்படுவது பள்ளிவாயல் அல்ல வெறும் , நினைவுக் கூடந்தான் என்றிருந்தாலுங்கூட அதனை முஸ்லிம்களுக்கெதிராகத்தான்
அதாவது, அரசமரம் எங்கிருந்தாலும் அங்கே ஒரு பெளத்த விகாரையை சிங்களவர் உருவாக்கியே தீருவர் எனும் அடிப்படையை இந்த இனவாத அடிப்படை இயக்கங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்த முயலலாம் என்பதே அதுவாகும்.
தமிழரின் பாரம்பரிய நிலங்கள் விகாரைக்காக அபகரிக்கப்படுகின்றது என்ற கோஷம் எழுந்ததும் பின் அடங்கியதும் நாம் ஏற்கனவே கண்டறிந்த வரலாறாக இருக்கிறது. முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் அபகரிப்பாக இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானம் எனும் பெயரில் நிறுவப்படலாம், அதற்கான அடிப்படையாகவே அநுராதபுர முயற்சி பார்க்கப்பட வேண்டும். ஏனெனில், இங்கே அப்படி எந்த கட்டுமானமும் இடம்பெறவே இல்லையென்று அநுராதபுர வாசிகள் கூறும் பொழுது, இல்லை அப்படிக் கட்டப் பார்த்தார்கள் அதனால் நாம் இடித்தோம் என்று பெளத்த பிக்குகளால் கூற முடிகிறது.
அப்படித்தான் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானமாக இருந்தால் அதைத் தட்டிக் கேட்பதற்கு நீதி மன்றம் ஒன்றின் தேவையை இல்லாமற் செய்யும் பெளத்த பிக்குகள் தம் பாடத்தினை பாபர் மசூதி இடிப்பிலிருந்து கற்றுக்கொண்டார்களா? எனும் கேள்வியும் வருகிறது. ஆக மொத்தத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் மெளனிகளாக இருக்கும் வரை அதிகார சலுகைகள் இருப்போர் ஆடிக்கொண்டயிருப்பர் என்பது இங்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.
அதில் ஒரு இனம் பாதிக்கப்படுவதும், இன்னொரு இனம் பலன் அடைவதும் அதிகார வர்க்கத்தினரின் விருப்பு வெறுப்பாக இருப்பின், சாதாரண மக்கள் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றாகிவிடும். எனினும், இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் பரீட்சித்துப் பார்க்கப்பட வேண்டும், சட்ட ரீதியாக அவர்களை எதிர்கொள்ளக்கூடிய பல வாய்ப்புகளை எதிர்க்கட்சியனரும், தமிழ்த் தரப்பினரும் ஏற்கனவே கை நழுவ விட்டு விட்டார்கள்.
குறித்த, அநுராதபுர சம்பவத்தின் உண்மை நிலையறிந்து, அதற்கான சட்ட நடவடிக்கைகள் மூலம் நியாயத்தை நிறுவ இலங்கைச் சோனகர்களால் முடியுமாயின் அது வரலாறாக மாறுவதும், அதிலிருந்து வரலாறு மீண்டும் மாற்றி எழுதப்படும் நிலை உருவாவதையும் தடுத்து நிறுத்த முடியாது.
எனினும், பொதுவாகவே நாமுண்டு நம் தொழிலுண்டு, நம் குடும்பமுண்டு என்று வாழப்பழகியிருக்கும் எம் சமூகம் அந்த வரையறை தாண்டிய சமுதாய விடியல் நோக்கியும் பயணிக்கும் தேவையுள்ளதையும் உணர்ந்து கொள்ள இது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி உருவாகப்போவதில்லை என்பதையும் கருத்திற் கொள்வது நல்லது.
- மானா-
No comments:
Post a Comment