Saturday, July 20, 2013

* முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படமாட்டாதா?


முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படமாட்டாதா?

lமுஸ்லிம் சமுகத்துக்கு எதிராக கடும்போக்கு இனவாத அமைப்புக்கள் மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள் தொடர் நிகழ்வாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதனை கடந்த பத்து நாட்களுக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் உணர்த்து வதாகவுள்ளன.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினை, மகியங்கனை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல், தெமட்டகொடையில் மாடு அறுக்கும் மடுவத்துக்குள் இறைச்சி ஏற்றும் லொறி எரிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள், மானவல்லை தெவனகல பிரதேசத்தில் முஸ்லிம்களை வெளியேற்றக்கோரும் கூட்டம் என்பன கடந்த பத்து நாட்களுக்குள் நடந்த முக்கிய சம்பவங்களாகும்.

மகியங்கனை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தின்போது பள்ளிவாசலில் கண்ணாடிகள் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு,பள்ளிவாசல் நம்பிக்கையாளர் தாக்கப்பட்டது மட்டுமன்றி இஸ்லாம் வெறுக்கின்ற பன்றி இறைச்சியும் பள்ளிவாசலுக்குள் போடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோர் மத்தியிலும் வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கீழ்த் தரமான ஒரு செயலாகும்.

மகியங்கனை சம்பவம் நடக்கும்போது பள்ளிவாசல் அமைந்துள்ள வீதியில் மட்டும் மின்சாரம் சிறிது நேரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்துமுடிந்து சிறிதுநேரத்தில் மின்சாரம் சீர்செய்யப்பட்டுள்ளது. இதன்படி இது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எது எவ்வாறானபோதும் இச்சம்பவம் நடந்தவுடன் ஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஊவா மாகாண காணி அமைச்சர் அனுர விதானகமகே பள்ளிவாசலுக்குள் போடப்பட்டிருந்த அழுக்குகளை அகற்றி நடவடிக்கை எடுத்திருந்தார். அத்தோடு பள்ளிவாசலில் அடுத்த தினம் ஜும்ஆ நடத்தவும் ஆதரவு வழங்கியிருந்தார். இதற்காக முஸ்லிம் சமுகம் அவருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றது. முஸ்லிம் கவுன்சில் இந்த விடயத்தில் தலையிட்டு ஜும்ஆ தொழுகை நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 20 வருட காலமாக ஐவேளைத் தொழுகைக்கு பயன்படுத் தப்பட்ட இப்பள்ளிவாசல் பிரதேச ஆளும்கட்சி அரசியல் தலைமைத் துவத்தின் ஆசிர்வாதத்துடன் கடந்த மாகாணசபைத் தேர்தல் காலம் முதல் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வளவு காலமும் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் திடீரென நோன்பு வந்ததும் இப்பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இவ்வாறு பள்ளிவாசல்கள்மீது தாக்கு தல் நடத்தவோ எவரும் இதுவரை கைது செய்யப்பட்டோ விசாரணை செய்யப்பட்டதோ இல்லை. இந்த நிலைமையை இனியும் தொடர அனுமதித்தால் நாடு சட்டமும் நீதியும் அமுல்படுத்தப்படாத ஒரு நாடாக மாறிவிடும். பலம்வாய்ந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையுள்ள நமது நாட்டில் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்வது கஷ்டமான காரியமல்ல. முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் அமுல் நடத்தப்படுவதில்லையா என முஸ்லிம்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

தெமட்டகொட இறைச்சி மடுவத்தில் 25 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதிமிகு லொறியினை காவி உடையுடையவர்கள் எனக் கூறப்படுவோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மாடு அறுப்பதனை எதிர்ப்பதற்காக இவ்வாறு செய்வதற்கு இடமளிப்பது எவ்வகையில் நியாயமாகும்.

மாவனல்லை தெவனகலையில் கடும்போக்கு அமைப்பொன்று நடத்திய கூட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அமைச்சர் அதாவுட செனவிரத்னவையும் மிக மோசமான முறையில் திட்டித் தீர்த்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரச்சினைகள் இருப்பின் அவற்றை பேச்சுவார்த்தை மேசைகளில் பேசித்தீர்ப்பதற்குப் பதிலாக ஐக்கியத்தையும் சமாதானத்தையும் சீர்குலைக்கும் வகையில் கூட்டங்களை நடத்திவிட்டு, பொலிஸார் பார்த்துக் கொண்டிருப்பது வேடிக்கையானது.

தொடரும் நிகழ்வுகள் குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஊடாக அறிக்கைகளை வெளியிட்டும் கடிதங்களை அனுப்பி விட்டு சும்மா இருந்து விடுவதாக சமுகத் தரப்பில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருப்பது போன்ற முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் குறிப்பாக ஆளும் கட்சியிலிருப்போர் இச்சம்பவங்கள் குறித்து ஆழமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகும்.

அனுராதபுரம் தர்கா தாக்கப்பட்டது முதல் மகியங்கனை பள்ளி வாசல் தாக்கப்பட்டது வரை சுமார் 25 பள்ளிவாசல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் அறிக்கை யில் சுட்டிக்காட்டியுள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை சட்டமும் நீதியும் அமுல்படுத்தப் படாத ஒருநிலை உருவாகி வருகின்றதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தப் பின்னணியில் முஸ்லிம்களின் இருப்பு, எதிர் காலம் கேள்விக்குறியாக மாறிவருகிறது.

தேர்தல் ஒன்று நெருங்கியுள்ள வேளையில் தம் பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் நாட்டில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படுவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்காக நாட்டில் நிதி நியாயத்தை மதிக்கும் சிறு பான்மையினர் பற்றி நல்லபிப்பிராயம் கொண்டுள்ள சக்திகளது ஆதரவினையும் பெற்று அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே இன்றைய சூழலில் சிறந்த தாக இருக்கும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment