இனவாதிகளின் பிரச்சாரம் அறுவடை செய்யப்படுகிறது. இலங்கை: மற்றொரு மியன்மாரா?
மாடறுப்பைத் தடைசெய்யுமாறு கோரி, பௌத்த மதத்தின் காவலர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற இனவாதிகள் சிலரால், கதிர்காமத்தில் இருந்து அலரி மாளிகை வரையான எதிர்ப்புப் பேரணியொன்று அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பிரச்சினையைத் தூண்டுவதற்கு எதுவித காரணமும் இருக்காத ஹலால் பிரச்சினையை பூதாகரமானதாக ஊதிப் பெருப்பித்த இவர்கள், தற்போது மாடறுப்புக் கோஷத்தைத் தூக்கியிருக்கிறார்கள். சிங்கள சமூகத்தினர் மத்தியில் முஸ்லிம் வெறுப்புணர்வை விதைத்து, முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செயற்படத் தூண்டுவதையே இவர்கள் தமது பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக, வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அகதி முகாம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற நிலையில், மியன்மார் பாணியிலான வன்முறைகளை இலங்கையிலும் கட்டவிழ்த்து விட்டு, ஏனைய முஸ்லிம்களையும் அகதி முகாம்களுக்குள் முடக்குகின்ற திட்டத்துடன் இவர்கள் இயங்குகிறார்களா என்ற சந்தேகம் கூட பலரிடம் உண்டு. மூன்று தசாப்த கால யுத்தத்தின் கோர வடுக்கள் இன்னும் மங்கி மறையாத நிலையில், இத்தகைய பிரச்சினைகளைத் தூண்டி வருகின்றமை வரலாற்றில் இருந்து எதுவித பாடத்தையும் இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகின்றது.
உண்மையில் இவர்கள் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்கள் மிக அபாயகரமானதாகும். பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களில் விஷத்தைப் பாய்ச்சி, இனங்கள் மத்தியிலான நல்லுறவை சீர்குழைக்கின்ற வகையிலான பிரசாரமாகும்.
இவர்களது பிரச்சாரத்தின் அறுவடைகள் என்று சொல்லக் கூடிய விதத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையிலான பல அசம்பாவிதங்கள் பதிவாகி இருக்கின்றன.
• பாடசாலை மாணவரொருவரின் தாயிடம் ஹிஜாப் ஆடை அணிய வேண்டாம் என்று அதிபர் கேட்டுக் கொண்ட நிகழ்வு
• பாடசாலை ஆரம்பமாகும் போதும், நிறைவடைகின்ற போதும், ஆசிரியர்கள் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என பாடசாலையொன்றில் முஸ்லிம் மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டமை
• ஹிஜாப் அணிந்தமைக்காக முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள்
• முஸ்லிம் வியாபார நிலையங்கள் மீதான தாக்குதல்கள்
போன்ற பல்வேறு சம்பவங்கள் இப்பிரசாரம் தனது அகோரமான, அசிங்கமான முகத்தைக் காட்டுவதற்கு ஆரம்பித்து விட்டது என்பதனையே உணர்த்துகின்றது.
சில நேரங்களில் அப்பட்டமான அண்டப்புழுகுகளையும் இவ்வினவாதிகள் கட்டமைக்கின்றார்கள். உதாரணமாக, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவு வழங்கும் போது, மூன்று முறை துப்பி விட்டே முஸ்லிம்கள் வழங்குவதாக பௌத்த பிக்குவொருவர் பொது நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இப்பிரசாரத்தை முன்கொண்டு செல்கின்றவர்கள் ஒரு சிறு குழுவினரே. ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு செல்கின்றமை, சிங்கள சமூகத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்களை ஆதரிக்கவில்லை என்பதனையே தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு இப்பிரச்சாரங்கள் எந்த வகையிலும் உறுதுணையானவை அல்ல என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த பத்யாத்ராவாவை இவ்விடத்தில் நினைகூர்வது இங்கு பொருத்தமானதாகும். இதனைத் தொடர்ந்து ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் முப்பதாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். ஆயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். மில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
எனவே, இத்தகைய பின்னணியில், இவ்வினவாதிகளின் ஊர்வலத்தை அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாற்றமாக இவர்களது ஊர்வலத்திற்கு பொலிஸ் காவல் வழங்கப்பட்டமை முஸ்லிம் மக்களை மாத்திரமின்றி, அமைதியை விரும்புகின்ற சிங்கள மக்களையும் கேலி செய்கின்ற செயலாகும். பேரணி செல்கின்ற வழியில், தங்கல்லையில் வைத்து, பொலிசார் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே, இறைச்சிக் கடையொன்றை இவர்கள் தீ வைத்துக் கொழுத்தி இருக்கிறார்கள். ஒலிப் பெருக்கியின் மூலம், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதோடு, அவர்களைப் பயங்கரவாதிகள் எனவும், தீவிரவாதிகள் எனவும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
இவ்விதம் சட்டத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதை விட்டு விட்டு, பம்பலபிடிய சந்தையில் குறிப்பிட்ட தினத்தில், இறைச்சிக் கடைகளை மூடுமாறு பொலிசார் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன் அநுராதபுர தர்கா உடைப்பு, தம்புள்ளை பள்ளிவாயல் மீதான தாக்குதல் போன்ற நிகழ்வுகளின் போதும் பொலிசார் இதே மனோபாவத்துடனேயே நடந்து கொண்டார்கள்.
ஜூன் 26, 2013 புதன் கிழமை பேரணி அலரி மாளிகையை அடைந்தது. இவர்களை ஜனாதிபதி சந்தித்தார். மாடறுப்பைத் தடை செய்யும் வகையில் இருமாத காலத்திற்குள் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்ததாக பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வுறுதி மொழி வழங்கப்பட்டது உண்மையாயின், இனவாதத்தைத் துடைத்தெறிவதற்குப் புறம்பாக, அவர்களுக்கு அரசாங்கம் அங்கீகார முத்திரை வழங்குகின்றது என்றே கருதப்பட வேண்டும்.
இன்று நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், இத்தகைய பிரச்சினைகளை நாட்டின் பிரதான பிரச்சினைகள் போன்று இக்குழுக்களால் சித்தறிக்கப்பட்டு வருகின்றமை, முன்னைய அரசாங்கங்களின் இனவாதக்கொள்கைகளின் விளைவாக உருவான முப்பதாண்டு கால யுத்தம், மற்றும் அதன் இழப்புகளில் இருந்து நாடு எதுவித பாடத்தையும் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை என்பதனையே உணர்த்துகின்றது.
யுத்த காலத்தில் ‘தமிழர்களை இப்போது கவனிப்போம். முஸ்லிம்களை பிறகு பார்த்துக் கொள்வோம்’ என்ற விதத்திலேயே இனவாதிகள் கருத்து வெளியிட்டு வந்தனர். தற்போது எல்.டீ.டீயினரை முழுமையாக வெற்றி கொண்ட பெருமிதத்தில், முஸ்லிம்கள் மீது தமது முழுக் கவனத்தையும் இவர்கள் செலுத்த ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது.
இவர்களது அழுத்தங்கள் காரணமாக பல உள்ளூர் அதிகார சபைகள் மாடறுப்பைத் தமது எல்லைக்குள் தடை செய்துள்ளன.
அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் யூத சியோனிஸ சக்திகள் இந்நாட்டிலும் தற்போது சுருசுருப்பாக இயங்கி வருகிறார்கள். இவர்கள் தமது முஸ்லிம் எதிர்ப்புப் நடவடிக்கைகளுக்கான, உள்ளூர் முகவர்களாக இவ்வினவாத சக்திகளைச் சுலபமாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
ஜனநாயகம், சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை என்பவற்றை வெற்றி கொண்டதற்காக ஐரோபிப்பிய யூனியனால் மியன்மார் அதிபர் விசேட விருதொன்று வழங்கி கௌரவிக்கப்பட்ட அதே நேரம், அவரது கூலிப் பட்டாளம் மியன்மார் முஸ்லிம்களைப் படுகொலை செய்தது. வியாபார அமைப்புக்களை தீயிட்டுக் கொழுத்தியது. இன்று இலங்கையில் நடக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், மியன்மாராக இலங்கையும் மாற்றம் பெறுவதற்கு அதிக நாட்கள் எடுக்காது.
நான்காண்டுகளுக்கு முன்புதான் யுத்தமொன்றில் இருந்து மீண்டு வந்திருக்கின்ற இலங்கையால், முஸ்லிம்களுக்கெதிராக மற்றொரு பிரச்சினையையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்பதே தற்போதிருக்கின்ற கேள்வி. எனவே, எல்லா சமூகங்களிலும் இருக்கின்ற பொறுப்பு வாய்ந்தவர்கள் இது தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இன்று உருவாகி இருக்கின்றது. ஒரு சிலரின் விருப்பு, வெறுப்புகளுக்காக நாட்டை மற்றொரு கொலைக்களமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது.
No comments:
Post a Comment