Tuesday, July 16, 2013

* சிங்கள மக்களின் பிரச்சினைக்கு மதவாதம் தீர்வாகுமா?



சிங்கள மக்களின் பிரச்சினைக்கு மதவாதம் தீர்வாகுமா?



இலங்கையில் நூற்றாண்டு காலமாக சிங்கள- முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவி வந்த நல்லுறவிற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கடும்போக்கு பௌத்த குழுக்களினால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. ஒற்றுமையாக சகோதரத்துவ மனப்பாங்குடன் வாழ்ந்த சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனவாதத்தை தூண்டியதன் காரணமாக நாட்டை பிணக்காடாக்கிய யுத்தம் மூன்று தசாப்தங்களாக நடந்தது. அதன் காரணமாக இந்த நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இன, மதவேறுபாடின்றி சாகடிக்கப்பட்டார்கள்.

யுத்தம் முடிவுற்று அதன் வடுக்கள் ஆறுவதற்கு முன்பாகவே முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மத்தியில் குரோதத்தை வளர்த்து இன்னொரு இனவாத யுத்தத்திற்குள் நாட்டு மக்களை இழுத்து வீசுவதற்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்டு வரும் பௌத்த இனவாத கும்பல் தயாராகி வருவது தெரிகின்றது.

இனவாதத்தையும் மதவாதத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வரும் இந்த விஷமிகளுக்கு ஆதரவாக, தங்களை நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சில ஊடகங்கள் கூட இன்று மதவாதக் குட்டையில் குளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நச்சுப் பாம்புகள் ஊதும் மகுடிக்கு ஏற்றபடி ஆடும் சிங்கள பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென சுவரொட்டிகள் மூலமாகவும் வாய்ச்சொல் மூலமாகவும் அருவறுக்கத்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் மதவெறியை தூண்டி இந்திய மக்கள் சமூகத்தின் மத்தியிலிருந்த தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்த ராஷ்ட்ரிய சிவசேனா (ஆர்.எஸ்.எஸ்.) போன்ற அமைப்புகள் ஆரம்பத்தில் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து, அதன் உச்சக் கட்டமாக குஜராத்தில் 2500க்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். முஸ்லிம் பெண்களும் சிறுமிகளும் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். இன்று பொது பல சேனா என்ற மதவாத பயங்கரவாதிகளின் செயல்களைப் பார்க்கும் போது இலங்கையிலும் அவ்வாறானதொரு கொடுமை எதிர்காலத்தில் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கின்றது.

1915ல் காலனித்துவ குள்ளநரிகளால் தூண்டப்பட்ட சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்துக்குப் பின்னர் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு சிங்கள முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. ஆங்காங்கே சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரச்சினைகள் நடந்தாலும் காதல் மற்றும் வியாபாரம் சம்பந்தமான பிரச்சினைகளை மையமாகக் கொண்டே அவை நடந்துள்ளன.

பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக முதலாளித்துவ அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மதவாதத்துக்கு தூபமிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. 70 - 76களில் அப்போதைய கல்வியமைச்சராக இருந்த பதியுத்தீன் மஹ்மூத், அவரது அமைச்சுக்குள் வைத்து, ஊவாவின் பொடி புதா என்றழைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வின் விக்ரமரத்தின என்பவரால் தாக்கப்பட்டார். அப்போது இனவாத வார்த்தைகளும் பிரயோகிப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனை அன்றைய சிங்களப் பத்திரிகையான 'தினமின" தலைப்புச் செய்தியாக படங்களுடன் வெளியிட்டிருந்தது. மறுநாள் தனது தேர்தல் தொகுதிக்கு வந்த எட்வின் விக்கிரமரத்தினவை தொகுதி மக்கள் மாவீரனை வரவேற்பதைப் போன்று வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். அவர் தாக்கியது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கல்வியமைச்சரை. அவர் ஒரு முஸ்லிம். அதுதான் காரணம். அதன் பின்னர் முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

மகியங்கனை பௌத்த விகாரையை அண்டியிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு முஸ்லிம்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். அப்போது ஆட்சியிலிருந்தது சிறிமாவோ பண்டாரநாயக தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம். தங்களை சோஷலிஸவாதிகள் என்று காட்டிக்கொண்ட இலங்கை சமசமாஜக்கட்சியும், இலங்கை கம்யூனிஸக் கட்சியும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தமையும், பிரபல முஸ்லிம் முதலாளித்துவ தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம்வகித்தமையையும் குறிப்பிட வேண்டும்.

1977ல் ஜுனியஸ் ரிசட் ஜயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களினதும் அமோக ஆதரவோடு முடிசூடா மன்னனாக ஆட்சிபீடமேறிய ஜயவர்தன புதிய அரசியலமைப்புத் திட்டத்தின் மூலம் தன்னை முடிசூடிய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்த ஜே.ஆர். மேற்கத்திய வல்லாதிக்கவாதிகளின் செல்லப்பிள்ளையாகவும், சிங்கள பௌத்த மதவாதிகளுக்கு நல்ல பிள்ளையாகவும் நடந்து கொண்டார். நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்ற அதரிகாரத்தையும் தனது சட்டைப்பைகளில் வைத்திருந்த அவர் 1982ல் மேலும் 6 வருடங்களுக்கு தனது சர்வாதிகார ஆட்சியை சட்ட விரோதமாக நீடித்துக் கொண்டார்.

1983ல் அவருடைய ஆசீர்வாதத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு வேலைசெய்த ஊழியர்களையும் சேர்த்து நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான கடைகளும் கொளுத்தப்பட்டு முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டமையையும் குறிப்பிட வேண்டும். தமிழ் மக்களுக்கெதிராக நடந்த இன வன்முறை வரலாற்றின் கறுப்பு ஜுலையாக பதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிறிஸ்தவ மத வழிபாட்டு நிலையங்கள் சிங்கள பௌத்த மதவாதிகளால் தாக்கப்பட்டன. அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவ தேவாலயம் பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த மதவாதிகளால் சேதப்படுத்தப்பட்டதோடு, வணக்கத்தில் ஈடுபட்டவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். முன்னேஸ்வரம் கோவிலுக்குள் அமைச்சரொவரின் தலைமையில் சென்ற குண்டர்கள் ஹிந்து மக்களின் வணக்க வழிபாடுகளுக் இடையூறு விளைவித்தனர்.

இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் ஒரு கையில் நவ தாராளமய முதலாளித்துவத்தையும், மறுகையில் சிங்கள பௌத்த இனவாதத்தையும் வைத்துக்கொண்டு தான் ஆட்சிக் கட்டில் ஏறின. சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் முதலாளித்துவவாதிகளால் தூவப்பட்ட மதவாதம் இன்று உச்சத்துக்கு வந்திருப்பதற்கான உதாரணம் தான் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை. அநுராதபுரம் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, தெஹிவலை பிரதேதசத்தில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடக் கூடாது என்று அச்சுறுத்தியமை, பதுளையில் அரசியல் காரணங்களுக்காக மதவாதத்தை தூண்டிவிட்டு அதில் குளிர்காய முயற்சிக்கின்றமை ஜனவரி 19ம் திகதி மஹரகம நகரில் NOLIMIT என்ற முஸ்லிமுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் தலைமையில் நடந்த பாரிய ஆர்ப்பாட்டம் போன்ற சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

நாட்டில் சிங்கள மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் முஸ்லிம்தான் என்று பொது பல சேனா என்ற பௌத்த மதவாத அமைப்பு முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனக்குரோதத்தையும், மதக் குரோதத்தையும் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள் முகம் கொடுக்கும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முஸ்லிம்களோ, தமிழர்களோ காரணமல்ல. முஸ்லிம் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தமிழர்களோ சிங்களவர்ளோ காரணமல்ல. அதேபோன்று தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு சிங்களவர்களோ முஸ்லிம்களோ காரணமல்ல. இவை அனைத்துக்கும் காரணமாக இருப்பது இந்த ஆட்சி முறை. இந்த சமூக அமைப்பு முறை. இந்த முறையை மாற்றியமைக்காத வரை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, வன்முறை போன்றவற்றிற்கு முகம்கொடுப்பதைத் தவிர வழியில்லை.

ஆகவே, இவற்றுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இலங்கை மக்களும் இணைந்து இந்த வன்செயல்களுக்கு எதிராக போராட முன்வரவேணடும். இல்லாவிட்டால், இனவாத, மதவாத அரசியல் வாதிகளின் ஆசீர்வாதத்தோடு அரங்கேறி வரும் இப்படியான துவேஷ நடவடிக்கைகளினால் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றப் போகிறார்களோ இல்லையோ. ஆனால் எண்ணெயில் தீ மூட்டப்போது என்னவோ உண்மை.

No comments:

Post a Comment