Tuesday, May 13, 2014

* புதுசு புதுசாக...!



புதுசு புதுசாக...!

சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் மீண்டுமொரு நீண்டகால போருக்கு வழிவகுத்துவிடக்கூடிய சூழல் இலங்கையில் உருவாகிக் கொண்டு வருகின்றதை அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழர் மற்றும் முஸ்லிம் இனங்களை அழித்து, நாட்டில் இரத்தம் சிந்தி கொலைக்களங்களாக மாற்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்திற்கு எதிராக தொடர்ந்தும் அநீதி, அடக்குமுறை இடம்பெற்றுவருமாயின், அதுவே தீவிரவாதம் அல்லது பயங்கரவாத அமைப்புக்களின் தோற்றத்திற்கு காரணமெனலாம்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் 2009ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பயங்கவாதத்தினை ஒழித்து விடடதாக அறிவித்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், அதற்குப் பின்னரான காலத்தில் மதத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள பயங்கர வாத அமைப்புகளை அடக்கவோ, அழிக்கவோ முன்வரவில்லை.

போதாக்குறைக்கு, அவற்றின் நடவடிக்கையினை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அதனைத் தோற்றுவித்துவரும் அடிப்படை வாத பௌத்த அமைப்புக்களால், இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகள் தோன்றிவிடுமென்ற அச்சம், பலருக்கு எழுந்துள்ளது.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள் கூட இது தொடர்பாக அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் ராஜபக்ச அரசாங்கத்தினால், பௌத்த பொதுபல சேனா, இராவண பலய, சிங்கள இராவய, போன்ற தீவிர வாத அமைப்புக்கள் தட்டிக் கொடுத்து வளர்க்கபட்டு வருகின்றன.

இவற்றில் குறிப்பாக பொதுபல சேனா அமைப்பும் அதன் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரரின் கடும்போக்கு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதுடன், மீண்டுமொரு இனப்பிரச்சினைக்கு வழிகோலுகின்றன.

இலங்கையில் பௌத்த மதத்தையும் அதன் மரபுகளையும் பலப்படுத்துவதுடன், இதனைப் பாதுகாப்பதற்காக உருவெடுத்துள்ளதாக தன்னைக் காட்டிக்கொள்ளும் இவர், இஸ்லாம், உட்பட அனைத்து சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பம் முதலே செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பொதுபலசேனா அமைப்பினர், புனித பூமி என்ற பெயரில் இருக்கு பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்து செயற்பட்டுள்ளார்.

அத்தோடு கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டு வருகின்றது.

1915ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிங்கள- முஸ்லிம் இனக்கலவரம் இங்கு சுட்டிக்காட்டவேண்டியது முக்கியம். ஏனெனில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட இனக்கலவரமாக இதுவே கருதப்படுகிறது.

1915ம் ஆண்டு மே 29ம் திகதி கண்டி மாவட்டம் கம்பளையில் பெரும்பான்மை சிங்கள பெளத்த கும்பல் ஒன்று பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களைத் தாக்கியதுடன், பல முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர்.

இக்கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 ஜுன் 5 இல் முடிவுக்கு வந்தது. இவ்வாறானதொரு கலவரம் மீண்டும் இலங்கையில் இடம்பெற வாய்ப்புக்கள் அதிகமாகவே உருவாகி வருகின்றன.

பொதுபல செனா அமைப்பின் தோற்றம் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு எதிராகவே தோன்றியுள்ளன.

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனை விமர்சித்தல், ஹலால் பிரச்சினை என புதுசு புதுசாக ஏதாவதொன்றை கிளப்பிய வண்ணமே குறித்த அமைப்பும் அதன் பொதுச் செயலாளரும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர், ஞனசார தேரரிடம் பெருமளவில் பணம் இருப்பதாகவும், இதனால் அரசாங்கம் அவர் மீது கை வைக்க அஞ்சுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அவர் மீதும், அவ்வமைப்பின் மீதும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அரசாங்கத்தின் மீது நேரடியாக சுமத்தப்படும் என்பதால், காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் சிந்தித்து வருவதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே ஞானசார தேரர் உட்பட பொதுபல சேனா அமைப்பினர் பௌத்த பயங்கரவதியென மேற்குலக நாடுகளினால் குற்றம் சாட்டப்படும் மியன்மார் நாட்டின் தேசப்பற்றுள்ள தேசியத் தலைவர் அசின் விராது தேரரைச் சந்தித்தார்.

இவர்கள் இருவரும் தமது வாழ்நாட்களில் பௌத்த எழுச்சியை ஏற்படுத்துவதாக் கூறி, இனங்களுக்கிடையில் பகையை உருவாக்கி வருகின்றனர். இவர்களால், பௌத்த மதத்தினருக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றே பௌத்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தரின் போதனைக்கு மாறாக செயற்பட்டுவரும் இவ்வமைப்பினர், கௌதம புத்தரையே அவமதிப்புக்குட்படுத்தி வருகின்றனர்.

பௌத்த தேரர் என்ற குணாதிசயங்களை மீறி, ஒரு ரவுடியைப் போல ஞானசார தேரர் செயற்பட்டு வருகிறார். சிறுபான்மையின அமைச்சர்களை, பறையன், அவன், இவன், என்ற கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி விமர்சித்து வருகின்றார்.

இவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் சிங்கள அமைச்சர்களைக் கூடி அலி, சிங்களப் புலிகள் என முத்திரை குத்தும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் பொதுபல சேனாவை அரசாங்கத்தினால் தடை செய்ய முடியாது. அது மாத்திரமல்ல அந்த அமைப்பின் செயற்பாடுகளைக் கூட அரசினால் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.

ஏனெனில், மகிந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை, குண்டர்கள், பௌத்த தீவிர வாதிகள் என்ற கும்பல்கள் சுற்றிவர இருந்தால் மட்டுமே, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் அதன் விகாரையில் இருந்தே மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து, வீதியில் இறங்கி இவ்வாறு கீழ்த்தரமாக செயற்படுவதால், பௌத்த பாதுகாக்கப்படுமா?

புத்தரின் போதனைகளை காற்றில் பறக்கவிட்டு, காவியுடையை தொடைக்கு மேல் தூக்கி ஏனைய அடக்க முயன்றால் அழிவுதான் மிஞ்சும்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றதால், பௌத்த பேரின வாத்தின் உண்மையான தோற்றம் வெளியில் தெரியாமல் இருந்தன. தற்போது ஞானசார தேரர் என்ற அடையாளத்துடன் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளது.

“வசல சுத்தங்” என்பது புத்தரின் போதனைகளில் ஒன்று.

கோபம், பழியுணர்வு, தீய எண்ணம், பொறமை, தவறான கண்ணோட்டம் மற்றும் ஏமாற்றும் போக்கு ஆகியவற்றை உடைய ஒருவனே தீண்டத்தகாதவன் ஆவான் என்பது அதன் அர்த்தம்.

ஆனால், பௌத்த தர்மத்திற்கு தலைகீழாகவே தனது செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுத்துவரும் இவ்வமைப்பு, பாராளுமன்றிற்குள் நுழையவும் வெகுநாட்கள் இல்லை.

உத்தியோக பூர்வமற்ற பொலிஸார் என தம்மை அறிவித்துக் கொண்டு இ்வவாறான அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வரும், இவ்வமைப்பிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் விரைந்து முற்றுப் புள்ளி வைக்கவில்லையென்றால், ஜெனிவா அல்ல, உலகம் முழுவதிலிருந்தும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பலைகள் கிளம்பலாம்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment