Tuesday, May 6, 2014

* நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும்...!



நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும்...!

இந்த நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும் தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இனங்களுக்க்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இன முறுகலை கொஞ்சம் கூட கணக்கில் எடுக்காது கண்மூடித்தனமான முறையில் நடந்து கொள்வதானது முஸ்லிம் சமூகத்தை கணக்கில் எடுக்காதிருப்பதை நன்கு உணர்த்துகிறது. 

பொதுபலசேனா என்ற அமைப்பை இந்த ஆட்சியாளர் எந்தக் காரணம் கொண்டும் கட்டுப்படுத்தவோ அமைதிப்படுத்தவோமாட்டார்கள். இது முஸ்லிம் சமூகத்தை மட்டும் குறிவைத்து செயல்படுத்தப்படும் அமைப்பாகும். இவ்வமைப்புக்கு இந்த அரசாங்கமே சகல உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. பொதுபலசேனா ஞானசார தேரருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு மேலாக இன்னும் தற்பாதுகாப்புக்கென ஆயுதங்கள், தோட்டாக்கள் வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளரிடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பதை உற்று அவதானிக்கையில் நிச்சயமாக தற்பாதுகாப்புக்கென ஆயுதங்கள், தோட்டாக்களை இந்த அரசு வழங்கவே போகிறது. இவற்றில் எமது அரசியல்வாதிகளில் யாருடைய உயிரை எடுக்கப்போகின்றனரோ தெரியவில்லை. ஞானசார தேரருக்கு துப்பாக்கி, தோட்டா மட்டும் கிடைத்துவிட்டால் எமது அரசியல் தலைவர்களின் நிலை மிகக் கவலைக்குரியதே. ஆகவே, நாம் மிகவும் நிதானமாகவும் விவேகமாகவும் செயல்பட வேண்டும். இதற்கான பாதுகாப்புக்களையும் நாம் அரசிடம் கோரவேண்டும். மேலும், உலக நாடுகள் அறியும்படி எமது பிரசாரங்களை மேற்கொள்ளல் அவசியமாகின்றது.

ஞானசார தேரரின் செயல்பாடுகளையும் மனநிலையையும் அவதானிக்கையில் அவருக்கு தற்பாதுகாப்புக்கு வழங்கப்போகும் துப்பாக்கி, தோட்டாக்களினால் எவரது உயிருக்கும் ஆபத்துக் கிடையாது என்ற உறுதியை ஞானசார தேரரிடம் பெற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் அவ்வாறானதொரு உறுதிமொழியை எடுத்தாலும்கூட, திரைக்குப் பின்னால் ஏற்படப்போகும் அரசியல்வாதிகளின் ஏற்பாட்டினால் ஞானசார தேரர் தப்பிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, எமது அரசியல் தலைவர்கள் மிகவும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். மறைந்த அஷ்ரஃபின் மரணம் இன்றுவரை மர்மமாகவே காட்டப்படுகிறது. அதுபோல் நடக்கப்போகும் உயிரிழப்பை ஏதோ காரணம்காட்டி, சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் இன்றைய அரசியல் நிலவரமாகும்.

இன்று பொதுபலசேனா என்ற அமைப்பு தன்கையில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அடக்கியொடுக்கி ஆழ மேற்கொள்ளும் செயல்கள் மிகவும் அநீதமானவையாகும். நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி சகல இனங்களுக்குமான ஒரு ஜனாதிபதியாவார். எனினும், இன்றைய அரசியல் நிலைப்பாட்டில் ஒரு சிறுபான்மைச் சமூகத்தை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை அடக்கியாள வைப்பதற்கான ஜனாதிபதியின் தந்திரோபாயங்களில் ஒன்றாக இது இருக்குமோ என எண்ணுமளவுக்கு முஸ்லிம் சமூகத்தில் கதைபடுகின்ற ஒரு பிரதான விடயமாக இருப்பதை காண முடிகின்றது. இன்றைய ஆட்சியாளரின் கண்மூடித்தனமான சில நிலைப்பாடுகள் சிறுபான்மைச் சமூகங்கள் இந்நாட்டில் அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய நிலைமையே இருப்பதாக இல்லை என்று கூறுமளவுக்கு அரசியல் விளையாட்டுக்கள் தென்படுகின்றன. பொதுமக்கள் எப்படிப்பட்டாலும் சரியே ஆட்சியதிகாரம் மட்டுமே தமக்குத் தேவை என்ற நிலைப்பாட்டிலே செயல்படுகின்றது என்பதை எமக்கு உணர்த்துகின்றது. இன்றேல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நடந்து கொள்ளும் அடாவடித்தனமான முறையைக் கட்டுப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சிறுபான்மைச் சமூகமான தமிழ், முஸ்லிம் சமூகத்தவர்கள் அதுபோன்றதொரு அடாவடித்தனம் செய்திருந்தால் அதைப் பெரிதுபடுத்தி முழு உலகுக்கும் அறியப்படுத்துவதுடன் நில்லாது அனைத்து ஊடகங்களையும் அழைத்து முன்னுரிமைப்படுத்தியிருக்கும். அனைத்துக்குமப்பால் முஸ்லிம் சமூகம் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுமிருக்கும்.

நான் பார்க்கும் உலகம்

★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment