Tuesday, May 6, 2014

* ஜனாதிபதி மஹிந்த, இனியும் மௌனமாக இருக்க முடியாது...!



ஜனாதிபதி மஹிந்த, இனியும் மௌனமாக இருக்க முடியாது...!

சர்வதேச ரீதியாக பயங்கரவாத செயற்பாடுகளை ஆய்வு செய்து பயங்கரவாத அமைப்புக்களை பட்டியலிட்டும் அறிக்கையிட்டும் வெளிப்படுத்தும் அமைப்பான 'பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு' (TRAC) பொதுபல சோன என்ற பௌத்த அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு இல்லை. ஏனென்றால் நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற செயற்பாடுகளைச் செய்கின்ற அமைப்புக் களைத்தான் எமது நாட்டு அரசு பயங்கரவாத அமைப்பாக அடையாளம் காணும் அதன்படி அதன் செயற்பாடுகளை தடைசெய்யும். 

இதனடிப்படையில் பொதுபல சேனா என்பது நாட்டுக்கு அச்சுறுத்தலான அமைப்பு அல்ல. அது முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாகவே இருக்கிறது. எனவே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலானது என்ற காரணத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு இலங்கை அரசு அதனை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்ய முன்வராது. 

ஆனாலும் பொதுபல சேனா வேண்டுமென்றே வீணான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கின்ற அடக்குமுறைகளும் அச்சுறுத்தல் செயற்பாடுகளும் காலப்போக்கில் பெருத்த இன மோதல்களை உருவாக்கி இனக்கலவரம் ஏற்படுமாயின் அதனால் ஏற்படும் பேராபத்துக்களும் அழிவுகளும் நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே சிந்தித்து அதற்கான முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும். 

இதன்படி நாட்டைப் பாதுகாக்கும் வகையில் பொதுபல சேனாவின் செயற்பாடுகளை அரசு ஒரு முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டில் சிறந்த ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இதனை நிறவேற்றுவதும் அரசின் பொறுப்பும் கடமையுமாகும். 

பொதுபல சேனாவின் செயற்பாடுகளை பயங்கரவாத நடவடிக்கைகளாக சர்வதேச அமைப்பு ஒன்று அறிவித்துள்ள இத் தருணத்திலும் இது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்தாது மௌனமாக இருப்பது அரசின் மீது முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைகிறது.

எனவே பொதுபல சேனா அமைப்பு பற்றி ஜனாதிபதி தனது அபிப்பிராயத்தையும் அரசின் நிலைப்பாட்டையும் பகிரங்க அறிப்புச் செய்ய வேண்டும். இது சட்ட ரீதியான அமைப்பா? இதன் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? இதனைக் கட்டுப்படுத்தவும் தடைசெய்யவும் முடியாதா? இவ்வாறான அமைப்பு இந்த நாட்டுக்கு அவசியமா? இந்த அமைப்பு எது செய்தாலும் முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்களுக்கு எதிராக போராட வேண்டுமா? இப்படி இது தொடர்பாக ஏதாவது ஒரு உத்தரவை அல்லது அறிவிப்பை ஜனாதிபதி பகிரங்கமாக பொதுமக்களுக்கு விடுக்க வேண்டும். 

ஜனாதிபதி இதுவிடயத்தில் இனியும் மௌனமாக இருப்பது அர்த்தமில்லை. முஸ்லிம் சமூகம் நம்பிக்கை கொள்ளும் வகையில் பொதுபல சேனா பற்றி ஒரு முடிவை அல்லது அது தொடர்பான ஒரு தீhமானத்தை அரசு நிறைவேற்றி, அதன் அர்த்தமற்ற செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.

இதற்கான ஒரு முடிவினை ஜனாதிபதி எடுக்கும் வகையில் அவருடன் ஒரு வட்ட மேசை உரையாடலை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதாரபூர்வமாக ஏற்படுத்த வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய சிங்கள சிரேஷ்ட்ட அமைச்சர்களையும், எதிர்கட்சியிலிருக்கும் ஓரிரு முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் அரசியல்வாதிகள் சிலரையும் உள்ளடக்கி முறையாகப் பேசி இதனை நீடிக்க விடாது ஜனாதிபதியிடம் ஒரு தீர்வைப் பெற வேண்டும்.

பொதுபல சேனா விடயத்தில் பொலிசாரால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கின்றது. மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களை கட்டுப்படுத்த அதிகாரம் கிடையாது என்று பௌத்த சாசன அமைச்சு பகிரங்கமாக அறிவித்திக்கிறது. ஏனைய தேரர்களோ, சிங்கள அமைச்சர்களோ மாற்றுக் கருத்துச் கூறமுடியாதபடி அராஜகம் மேல் எழுந்து நிற்கிறது. யார் கருத்துக் கூறினாலும் உடனே அவர்களுக்கு மோசமான வார்த்தைகளால் பொதுபல சேனா எதிர்ப்பைக் காட்டிவிடுகிறது. அமைச்சர்களான டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் மீது ஞானசாரத் தேரர் குறிப்பிட்டிருக்கும் எதிர்க் குரல்கள் இதற்கு உதாரணமாகும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் மனிதனையே கடிக்கும் கதைபோல இன்று ஞானசாரத் தேரர் அரசாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, றிசாட் பதியுத்தீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய ஐந்து அமைச்சர்களுக்கும் பகிரங்க விவாத அழைப்பினை விடுத்திருக்கிறது. 

ஒரு விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமானால் முக்கியமாக இரண்டு விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். 

1. விவாதத்தில் பேசப்படும் விடயம் அல்லது விவாதத்தின் கருப்பொருள்
2. விவாதம் செய்கின்ற நபர் 

மேற்படி இரண்டுவிடயங்களிலும் ஞானசாரத் தேரர் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவராகவே இருக்கிறார். 

முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரத் தேரர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் கருத்துக்களும் அர்த்தமற்றவை அது நியாயமற்றவை ஆதாரமற்ற ஆபாண்டமான வீண் வாதங்கள் எனவே அர்த்தமற்ற ஒரு கருத்துடன் இருப்பவருடன் வாதம் புரியவேண்டிய எந்த தேவையும் முஸ்லிம் மக்களுக்கும் இல்லை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குமில்லை. 

அடுத்து தான்தான் பேச வேண்டும் தான் பேசுவதுதான் சரியானது தனக்கு பதில் சொல்கின்றவர்கள் தலையில்லாதவர்கள் என்ற கருத்துப்பட பல ஊடக சந்திப்புக்களில் ஞானசாரத் தேரர் பதில் கூறியிருப்பதை அறிகிறோம். எனவே யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படை பேச்சு நாகரீகமும் இல்லாத ஒருவருடன் சமமாக இருந்து வாதம் புரிவது ஒழுக்கமுள்ள எமது நாகரீகத்திற்கு நல்லதல்ல. 

இவைகளுக்கு அப்பால் ஞானசாரத் தேரர் யார்? இவருக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? இவருக்கு விளக்கமளித்து வாதிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. இந்த நாட்டில் ஒரு அரசாங்கம் இருக்கிறது. அதில் எமக்கான ஜனநாயகம் இருக்கிறது. நீதியை நிலைநாட்ட சட்டம் இருக்கிறது. எல்லா மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பு இருக்கிறது. இவற்றுக்கும் மேலாக எங்களுக்கு பதில் கூறும் ஒருவராக ஜனாதிபதி இருக்கிறார். இதற்கிடையில் ஞானசாரத் தேரர் எங்கிருந்து வந்தவர்.

எனவேதான் தொடரும் பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத செயல்களுக்கு அரசாங்கத் தரப்பில் உள்ள பல அமைச்சர்களும் பகிரங்க கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற இந்நிலையில் ஜனாதிபதி இனியும் மௌனமாக இருக்காது ஏதாவது ஒரு முடிவை வெளிப்படையாக அறிவித்தே ஆகவேண்டும். அவ்வாறில்லையாயின் நாட்டில் ஏற்படும் இனவாத மோதல்கள்களுக்கு அரசாங்கம் வழிவிட்டிருப்ப தாகவே நாட்டு மக்கள் முடிவு கொள்ள வேண்டும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment