Tuesday, May 6, 2014

* பௌத்தர்கள் - முஸ்லிம்களிடையே நல்லுறவை கொண்டுவரும் முயற்சியாக...!




பௌத்தர்கள் - முஸ்லிம்களிடையே நல்லுறவை கொண்டுவரும் முயற்சியாக...!



நாட்டில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே நிரந்தரமான இனப்பிளவை ஏற்படுத்தும் முயற்சியொன்று இப்போது தெளிவாக உணரப்பட்டிருக்கிறது..

இதற்கு உண்மையான காரணத்தை திட்டவட்டமாக வெளிப்படுத்த முடியாத நிலையில் இருதரப்புக்கும் இடையிலான இந்த முரண்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை ஊடகங்கள் வெளியிடும் அறிக்கையிலிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.

இதில் இன ஒருமைப்பாட்டை முன்னெடுக்கவென ஜாதிக பலசேனா என்கிற பெயரில் செயற்படும் அமைப்பொன்றின் நடவடிக்கைகள் பொதுபலசேனா என்கிற பௌத்த மதத்தை பாதுகாக்கும் அமைப்பின் செயற்பாடுகளை இப்போது குழப்பிவிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த அமைப்புக்கள் எவ்வாறு எப்படி தோன்றின, இவற்றின் மதம் சார்ந்த செயற்பாடுகள் என்ன என்பதை மக்கள் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே கலவரமான நிகழ்வொன்றில் தம்மை அறிமுகம் செய்யும் அமைப்புக்களாக இந்த அமைப்புக்கள் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

பொதுவாகவே பொதுப்பணி குறித்த செயற்பாடுகள் என்று வரும்போது முஸ்லிம்கள் எப்போதும் தமது இனத்தவரையே முன்னுரிமைப்படுத்துகிறார்கள் என்கிற கருத்து ஏனைய தரப்பினரிடம் இருந்து வருவது வழமையாக நாமெல்லோரும் அறிந்த செய்தி.

அதனோடு இணைந்ததாக பிற மதத்தவர்களை தம்மிலிருந்து தனியாக பிரித்துவைத்துக் கொண்டு அவர்களுக்கிடையிலான தொழில், வர்த்தகம், மற்றும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் தனியான ஒரு அணுகுமுறையை கடைப்பிடிப்பதாகவும் ஒரு அபிப்பிராயம் வேற்று மதத்தவர்கள் மத்தியில் உண்டு.

பொதுவில் உலகெங்கிலும் சில மதங்கள் பிற மதத்தவர்கள் விடயத்தில் சற்று கூடுதலாக ஒரு இறுக்கமான ஒரு போக்கையும் அவ்வாறே வேறு சில மதங்கள்; தளர்வான போக்கையும் கொண்டிருக்கின்றன.

இந்த நவீன யுகத்தில் எந்த ஒரு நாடு மட்டுமன்றி எந்த ஒரு இனக்குழுவும் கூட பிற இன மக்களை சார்ந்தே வாழ முடியும் என்பது உணரப்பட்டிருக்கும் சூழலில் தமது இறுக்கமான மத, கலாச்சார நடைமுறைகளால் சக இன மக்களுடன் சகஜமான ஒரு உறவை, ஊடாட்டத்தை கொண்டிருப்பதில் முஸ்லிம்கள் தடுமாறி நிற்பதையும் இவ்விடத்தில் கவலையுடன் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

பௌத்த நிறுவனங்களின் நிலைமைக்கு வருவோம். நடப்பிலுள்ள அரசு பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கள மக்களின் அரசாக மத்தியில் அமைந்திருக்கிறது. 

இந்த நிலையில் அந்த சமூகத்திலிருந்து மாற்று நடைமுறையொன்றை பிற மதங்கள் விடயத்தில் அறிமுகப்படுத்த விரும்பும் ஒரு அமைப்பு அதனை சட்ட வரம்புகளுக்குட்பட்டு குறித்த அமைச்சினூடாக சக மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வெளியிடுவது சாத்தியமே.

உண்மையில் இது ஒரு இலகுவான விடயம். ஆனால் இந்த பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்கள் குறித்து அந்த முஸ்லிம்களும் ஏறு;றுக் கொள்ளும் வகையிலான மாற்று நடைமுறையொன்றை நியாயமாக வரையறுத்து வெளிப்படுத்தவில்லை.

அந்த அறிவிப்பில் இஸ்லாம் கொண்டுள்ள குறித்த நடைமுறை எந்தவகையில் பிற மதங்களை பொறுத்தவரை பாதகமானது, சிக்கலானது என்பதை வெளிப்படையாக அறிவிப்பது அவசியமானது. 

அவ்வாறு அறிவித்திருந்தால் பிற மதங்களது அங்கீகாரத்துடன் சில புதிய சரியான நடைமுறைகளை அமுலுக்கு கொண்டுவரும் வாய்ப்புக்களும் கூட பௌத்த அமைப்புக்களுக்கு கிட்டியிருக்கும்.

ஆனால் பௌத்தர்கள், இஸ்லாமியர்களை தொடர்புபடுத்தி வெளிவரும் செய்திகள் ஏதோ தற்செயலாக, திடீரென, அறியாத்தனமாக இடம்பெறும் நிகழ்வுகள் போல் ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. 

முஸ்லிம்கள் பிற மதத்தவர்கள் விடயத்தில் பாரபட்சமான அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள் என்றால் அது அவர்களது எத்தகைய மத நடவடிக்கையின் பாற்பட்டது, அது பிற மதத்தவரை எவ்வகையில் பாதிக்கின்றது என்பதை வெளிப்படையாக கூறுவது ஒன்றும் தவறான, ஜனநாயகத்துக்கு முரணான நடவடிக்கையல்ல.

பகவான் புத்தர் நடைமுறை வாழ்க்கை நிலைமைகளிலிலிருந்து மனித உளவியலை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.அவரது போதனைகள் நிஜவாழ்க்கையில் ஒருவரின் உன்னதமான மனித நடத்தை எவ்வாறிருக்க வேண்டுமென்பதை நேர்த்தியாக வெளிப்படுத்துபவை.

புத்தரின் போதனைகளையும் ஒழுக்கத்தையும் கற்றுணர்ந்த பின்பு அவரது பெயரால் அவர் விரும்பும் சமூக நடைமுறைக்கு முரணாக நாம் செயற்படுவதென்பது பகவான் புத்தரை அவமதிக்கும் ஒரு செயன் முறையாகும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டு செயற்படுவது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment