மாகாண அதிகாரங்களும் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும்
இலங்கை முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையிலும் அதிகாரப் பகிர்வில் தொடர்ச்சியாக பங்கு கேட்கும் ஒரு இனம் என்ற வகையிலும் அதிகாரப் பகிர்வு, தேசிய இனங்களுக்கான அரசியல் உரிமை, பாதுகாப்புகள் தொடர்பிலான விடயங்களில் அக்கறை செலுத்துவதும், தமது அபிப்பிராயங்களை தெரிவிப்பதும் அதிகாரப் பகிர்வுக்கான நிலைப்பாட்டில் மிக மிக உறுதியாக நிற்பதும் இன்றைய நெருக்கடியும் அச்சுறுத்தல் மிக்க நிலையில் முக்கியமானதாகும்.
அதிகாரங்களை நாங்கள் யாரிடமிருந்து கோருகிறோம்? எச்சந்தர்ப்பத்தில், எச்சூழலில் கோருகிறோம்? எப்போது மௌனமாக இருக்கிறோம்? கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்? என்பதையிட்டு மிக ஆழமான கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன.
இன்றைய நிலையில் இலங்கை அரசானது மாகாணங்களுக்குள்ள அதிகாரங்களை வலுக்குறைப்புச் செய்வதற்கும் தேசிய இனங்களுக்கான அதிகாரங்களை, உரிமைகளை சூழ்ச்சியுடன் கபளீகரம் செய்து தன்வயப்படுத்திக்கொள்வதற்கு பல முன்னெடுப்புகளை செய்துவரும் நேரம் இது. இந்நேரத்தில் இலங்கை அரசாங்கத்தில் முக்கிய இராஜதந்திரியாக உள்ளவரும் நீண்ட கால அரசியல் சமூக அறிவின் ஆளுமையாக உள்ள தயான் ஜயதிலக அவர்கள் இந்நிலை தொடர்பாக இரு தினங்களுக்கு முன் தெரிவித்துள்ள ஒரு கருத்தினை மேற்கோள் காட்டி எனது கருத்துகளை பதியலாம் என நினைக்கின்றேன்.
“பிராந்திய அதிகாரங்களையும் 13வது சட்டமூலத்தையும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்பதால் எழக்கூடிய ஆபத்துக்கள் மிக வெளிப்படையானது. பனிப்போரின் பின்னான சூழ்நிலையை ஜாதிக ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளும் சிங்கள தலைவர்களும் புரிந்து கொள்ளவே இல்லை.” என தெரிவித்துள்ளார். இந்த மேற்கோளுடன் எனது கேள்விகளாக இலங்கை முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் சமூக உரிமைகளுக்காக குரல் எழுப்புவதாக சொல்கின்ற அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தினை எந்தளவு புரிந்துவைத்திருக்கின்றனர்? இந்நிலைமையை எதிர்கொள்ள இவர்களிடம் உள்ள அரசியல் திட்டங்கள் என்ன? என்கிற கேள்விகள் எழுகின்றன.
13வது திருத்தச் சட்டத்தினூடாக 1987ல் வழங்கப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்களை குறைப்பதற்காக 19வது திருத்தச் சட்டமூலம் ஒன்றினை அரசாங்கம் கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறது. இந்தச் சட்டமூலத்தில் இரு மாகாணங்கள் தாமாக விரும்பினால் இணைந்துகொள்ளமுடியும் என்கின்ற சரத்தையும், மாகாணசபை தொடர்பான சட்டமூலங்கள், அதன் நடைமுறைகள் தொடர்பான விடயங்களில் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டுமானால் அனைத்து மாகாண சபைகளும் அதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற பிரிவில் திருத்தத்தையும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் மாற்றங்களையும் கொண்டுவருவதாகவே இத்திருத்த மூலம் இருக்குமென சொல்லப்படுகிறது. இதன் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட எந்த அதிகாரத்தையும் பாராளுமன்ர பெரும்பான்மை மூலம் மீளப்பெரும் அதிகாரச் சூழல் இச்சட்ட திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு மாகாணசபைகளை அதிகாரமற்ற வெறும் பெயரளவிலான சபைகளாக மாற்றுவதற்கே இந்த முயற்சி செய்யப்படுகிறது என்பது மிகத் தெளிவானது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு போதுமான அதிகாரத்தை வழங்கவில்லை என்பது மிக முக்கியமான குற்றச்சாட்டாக அன்றிலிருந்து இன்றுவரை முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்தபோது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சுய ஆட்சிக் கோரிக்கையின் அரசியல் நியாயத்தின் வழியில் குறைந்தபட்ச தீர்வாக மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டது என்பதே உண்மை.
இந்திய-இலங்கை அரசின் இந்த அதிகாரப் பகிர்வு மாகாண முறையை ஏற்றுக்கொள்ளாத தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களும் தமிழ் மக்களுக்குள் உள்ளனர். விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியத் தரப்பும் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்துசென்று தனிநாடு அமைப்பதே தமக்கான அரசியல் தீர்வாக கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற ஒரு சில அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களில் ஒரு பிரிவினரும் ஐக்கிய இலங்கைக்குள் மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டு இதனை ஒரு அரசியல் தீர்வாக பார்ப்பவர்களும் உள்ளனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இலங்கை இந்திய ஒப்பந்தமும் அதன் பின் ஏற்பட்ட மாகாண சபை ஏற்பாடும் அதையொட்டி நடந்த மாகாணசபை தேர்தலும் முஸ்லிம் அரசியல் சூழலில் முஸ்லிம் மக்களின் அரசியல் கோரிக்கைகளாக சில முன்வைக்கப்பட்டன. அவற்றில் நான் காணும் சில அம்சங்கள்…
* முஸ்லிம்கள் மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டதுடன் தமக்கான அரசியல் கோரிக்கையாக மாகாணசபை முறைமையை முன்வைத்தனர் (நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம், தென்கிழக்கு மாகாணம்).
* 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து நடந்த மாகாணசபை தேர்தல்தான் முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மக்கள் பிரதிநிதித்துவ அரசியல் அரங்கில் உறுதிப்படுத்தியதும் முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கையாக அதிகாரப்பகிர்வையும் பகிர்ந்தளிப்பையும் கோரிய அரசியல் நிகழ்வாக அமைந்தது.
* வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம்களின் அங்கீகாரம் இல்லாமல் இணைத்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான துரோகம் என்றும், தமிழ் மக்களுக்கு தனிப்பெரும் மாநிலமாக வடகிழக்கு மாநிலத்தை கையளித்தமையானது முஸ்லிம்களுக்கான அதிகாரப்பகிர்வை சாத்தியமற்றதாக்கிவிட்டதெனவும் சிங்கள பெருந்தேசிய கட்சிகளுக்கு எதிரான அரசியல் விமர்சனமாக எழுந்தது.
* வடக்கு கிழக்கில் தமிழ் பெரும்பான்மை மாகாண அமைப்பில் முஸ்லிம்களின் இன, கலாசார தனித்துவங்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தடையாக இருக்கும் தமிழ் மேலாதிக்க அதிகாரப் பகிர்ந்தளிப்பு முறையிலிருந்து, முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வில் நியாயம் வழங்கப்படவேண்டுமென முஸ்லிம் காங்கிரஸால் கோரிக்கைவிடப்பட்டு வந்தது.
* மத்திய அரசிலிருந்தும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட மாகாண தமிழ் பெரும்பான்மையின அரசியல் தலைமைத்துவங்களிடமிருந்தும் தமக்கான அதிகாரப் பகிர்வை முஸ்லிம்களும் முஸ்லிம் காங்கிரஸும் கோரின.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த கோரிக்கைகளும் அரசியல் நிலைப்பாடுகளும் முஸ்லிம் மக்களுக்குள் பெருமளவு அரசியல் ரீதியாக தாக்கத்தினையும் அங்கீகாரத்தினையும் தந்ததே உண்மையாகும். ஒவ்வொரு மாகாணசபைத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் பங்குபற்றியதுடன் மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டும் செயற்பட்டு வந்துள்ளது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். அதே நேரத்தில் மாகாணங்களுக்கான அதிகாரங்கள், அதிகாரப் பகிர்ந்தளிப்பு, பரவலாக்கம் போன்றவற்றை முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு தடவைகளிலும், பல பேச்சுவார்த்தைகளிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முஸ்லிம் காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட அரசியல் ஆவணங்களிலும் உறுதியாக வலியுறுத்தியே வந்திருக்கிறது.
இன்றைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் உயிருடன் இருப்பாரேயானால் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை நடத்துகின்ற விதம் தொடர்பிலும் சிறுபான்மை இனங்களை கையாளுகின்ற வழிமுறை குறித்தும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பதற்காக அரசாங்கம் செய்கின்ற சூழ்ச்சிகளை மிக வன்மையாக எதிர்ப்பார் என்பதை அவருடன் அரசியல் ரீதியாக இணைந்து பணி செய்த என்னால் மிக உறுதியாக கூற முடியும்.
முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வாக, தனது கட்சியின் அரசியல் இலட்சியமாக மாகாணசபை முறையை முன்வைத்து வலியுறுத்திய ஒரு அரசியல் தலைவர் மகாணங்களுக்கான அதிகார குறைப்பையும் வழங்கப்பட்ட அதிகாரங்களை சூழ்ச்சியாக பறிப்பதனையும் ஒரு போதுமே அங்கீகரித்திருக்க மாட்டார். அதற்கு உடன்பாடாக தனது கட்சியையும் மக்களால் வழங்கப்பட்ட ஆணையையும் துஷ்பிரயோகம் செய்து துரோகம் இழைப்பதற்கும் அவரால் முடிந்திருக்காது. இந்த உண்மை இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருக்கும் சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் பொதுச்செயலாளராக இருக்கும் சகோதரர் ஹஸன் அலி அவர்களுக்கும் கட்சியின் உயர்பீடத்திலுள்ள (High Command, Politbureau) மூத்த சகோதரர்களுக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும்.
ஏலவே திவிநெகும சட்டமூலத்தில் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் ஏனைய முஸ்லிம் அரசியற் கட்சி பிரதிநிதிகளும் நடந்துகொண்ட உண்மை வெட்டவெளிச்சமானது. உண்மையில் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மிகத் தெளிவான அரசியல் நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய காலகட்டத்தில் இதுவும் ஒன்றாகும். இலங்கை அரசிற்கும் தமிழர்கள் தரப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் தமக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும், அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என பொங்கி எழும் மக்களும் அரசியல் தலைவர்களும் (இந்நிலைப்பாட்டை நான் தவறு என்று சொல்லவில்லை) சிங்கள ஆளும் அரசுகள் முஸ்லிம்கள் தமக்கு தீர்வாக முன்வைக்கின்ற மாகாண முறைமையையும் அதற்கான அதிகாரத்தையும் பறிக்கின்ற போது, வலுக்குறைப்புச் செய்கின்ற போது, மௌனமாக இருப்பது (இந்த இரட்டை நிலைப்பாடுதான் முஸ்லிம்களது அரசியல் கோரிக்கைகள் தொடர்பில் ஒரு உறுதியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது) இன்னொரு படி மேலே போய் அந்த அதிகாரங்களை பறித்தெடுப்பதற்கு ஆதரவளிப்பது எந்த வகையில் நியாயமானது? எந்த வகையில் முஸ்லிம் மக்களின் அரசியற் கோரிக்கைகளுடன் தொடர்புபட்டது? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலையையும் அரசியல் கோரிக்கையில் சத்திய சோதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்கப்படக்கூடாது என்பதா முஸ்லிம்களின் அரசியற் கோரிக்கை? தமிழ் மக்களுக்கான அரசியற் கோரிக்கைகளை தமிழ்த் தலைமைகள் முன்வைக்கின்ற போது முஸ்லிம்களுக்கான அரசியற் கோரிக்கைகளை முஸ்லிம் அரசியற் தலைமைகள் முன்வைப்பதுதானே நியாயமானது? இனப்பிரச்சினைக்கான தீர்வில் மர்ஹும் அஷ்ரஃப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் அன்று முன்வைத்த அரசியல் கோரிக்கையில் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கொள்கை மாற்றங்களை செய்திருக்கின்றதென்றால் அது தொடர்பாக முஸ்லிம் மக்களுக்கு, தமது நிலைப்பாட்டை முன்வைப்பதுடன் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இந்நிலைப்பாட்டை பகிரங்கப் படுத்துவது முக்கியமானதாகும். “முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு பதவி, முஸ்லிம் மக்களுக்கு உதவி” என்ற நிலையையா இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் கொள்கையாக கொண்டிருக்கிறது?
********
மாகாணங்களுக்கு அதிகாரங்களை குறைப்பதற்கு இந்த அரசாங்கம் அமைச்சரவையில் ஆலோசனைகளை சமர்ப்பித்த போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் ஹக்கீம் அவர்கள் இந்த அதிகாரக் குறைப்பு என்பதே மகாணசபைகளை முற்றாக அழிப்பதற்கு சமம் என்றும் இது தொடர்பாக தன்னால் தனியே தீர்மானம் எடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்ததுடன் ஒருவாரகால அவகாசம் கேட்டிருப்பது அவரின் பொறுப்பினையும் இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கவேண்டிய உறுதியான நிலைப்பாட்டின் அவசியத்தையும் நமக்கு காட்டுகிறது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி அதி உயர்பீடத்தையும் கூட்டி இந்நிலை தொடர்பாக விவாதிப்பதற்கான கூட்டங்கள் கூட்டப்பட்டு வருகிறது. ஏனெனில் இது ஒரு சாதாரணமான விடயம் அல்ல. முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளுடனும் உரிமையுடனும் அரசியல் கோரிக்கைகளுடனும் சம்பந்தப்பட்ட விடயமாக உள்ள அதேநேரம் இலங்கையின் ஏனைய சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளுடனும் இருப்புடனும் சம்பந்தப்பட்டதாக இது உள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் அரசியல் கோரிக்கையாளர்களா? தேசிய இனப்பிரச்சினையின் பங்குதாரர்களா? அல்லது சிங்கள ஆளும் குழுமத்தின் அரசியல் மேலாதிக்கத்தை பொறுத்துக்கொண்டும், அதற்கு ஆயிரம் ஆயிரம் நொண்டிச் சாட்டுகளை கூறிக்கொண்டு காலங் கடத்துபவர்களா என்று நிருபிக்கவேண்டிய தருணம் இது. அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் இறுதிப் பேராளர் மாநாட்டின் போது அம்மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர்கள் இம்மாநாட்டில் மிக உணர்வுபூர்வமாகவே “அரசாங்கமானது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த அதிகாரத்தையும் குறைக்கும் முயற்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்காது” என பேராளர் மநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றபட காரணமாக இருந்தார்கள். அப்பேராளர் மாநாட்டு தீர்மானங்களில் இந்த விடயம் முக்கியமான பேசுபொருளாகவும் நிலைப்பாடாகவும் இருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தின் முடிவின் பின் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளில் பிரதானமானது 13வது திருத்தத்திற்கும் கூடுதலான அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்வேன் என்பதாகும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவானதும் தனது பரிந்துரையில் அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் என்பதுடன் இனங்களிடையே சமத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படுவதற்கு இது அவசியம் எனவும் தனது முன் மொழிவில் பரிந்துரைத்திருந்தது இங்கு கவனிக்கத்தக்கது. யுத்தத்தின் பின் தோன்றியுள்ள சிங்கள பேரினவாத சிந்தனைகளும் அரசாங்கத்தின் இனவாத கருத்தியல் நடைமுறைகளும் இன்று இந்நிலைமைகளை முற்றாக மாற்றியமைத்திருக்கிறது. மாகாணசபை முறைமையை ஒழிப்பதற்காக ஜாதிக ஹெல உருமயவின் தலைமையில் 37 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புகள் ஒன்றிணைந்திருக்கின்றன. இவர்களுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டிருக்கின்ற அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்றோர் தலைமை தாங்குகின்றனர்.
சிங்கள மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக என சொல்லிக்கொண்டு புறப்பட்டிருக்கும் இந்தக் கட்சிகளும் அமைப்புகளும் பேரினவாத சிந்தனை கொண்ட அமைச்சர்களும் அரசாங்கமும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிராந்திய அளவிலான ஆகக் குறைந்த அதிகாரங்களை பறித்தெடுப்பதற்கு போர்க்கொடி தூக்கும் இன்றைய நிலையில் முஸ்லிம்களுக்கான அரசியல் உரிமையை பாதுகாக்க இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்ன செய்யப்போகிறார்கள்?
ஜனநாயக மரபுகளை மீறுவதாகவும் இனங்களிடையேயான புரிந்துணர்வை அழித்தொழிப்பதாகவும் அரசாங்கத்தின் இந்த முயற்சி உள்ளதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கத்தின் இந்த செயலை குறித்துரைத்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டில் ஒரு ஜனநாயக விரோத அரசை பலப்படுத்தியது போன்று, இன்றைய நிலைமையில் தமிழ் முஸ்லிம்களின் அடிப்படை அரசியல் உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தவறிழைக்காது என்று நம்புவோமாக…

No comments:
Post a Comment