Monday, June 17, 2013

* கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு திறந்த மடல்...



கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு திறந்த மடல்...

மூதூர் முறாசிலிடமிருந்து கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு திறந்த மடல்


கௌரவத்திற்கும் மதிப்பிற்குமுரிய ஞானசார தேரர் அவர்களே,

எந்த இறைவன் உங்களையும் என்னையும் எல்லோரையும் படைத்தானோ அந்த இறைவனிடம் பிரார்த்தித்து ஆரம்பிக்கின்றேன்.

நான் உங்களது பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் ஊடகங்கள் வாயிலாகவும் நேரிலும் அவதானித்தவன் என்பதனால் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இத்திறந்த மடலை வரைகின்றேன்.

பௌத்த சமயத்தை கற்றுணர்ந்த (பௌத்தர்களின்) வணக்கத்திற்குரிய உங்களோடு ( பதுளை ஒன்று கூடலின் பின்பு) அவசரமாக வரையும் இம்மடல் மூலம் நான் பேசும் விடயத்திலும் பேசும் முறையிலும் ஏதும் பிழைகள் இருந்தால் அதனை மன்னித்துக் கொள்ளுமாறு கோருகின்றேன்.

ஞானசார தேரர் அவர்களே,

பௌத்த மதம் ஏனைய மதங்களை துன்புறுத்தும் வகையில் கருத்துக்கூறுவதையும் செயற்படுவதையும் தடுத்துள்ளது என்பதை நான் படித்திருக்கின்றேன். அதனால் பௌத்த மதப் போதகரான ஒருவருக்கு ஏனைய மதங்கள் புண்படும் வகையில் கருத்துக் கூறுவதற்கும் செயற்படுவதற்கும் முடியாது என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே பொது பல சேனாவினது முக்கிய நோக்கமென அடிக்கடி கூறிவரும் உங்களால் பௌத்த மதத்திற்கு எதிராக இயங்குதல் ஆகுமா என்று முஸ்லிம்களைவிடவும் சிங்கள மக்கள்தான் கேட்கின்றனர்.

ஏனைய சமயங்களை புண்படுத்துவதை தடுக்கும் பௌத்த மதத்தில் இருந்து கொண்டு அதனை பாதுகாப்பதே நோக்கமென்றும் கூறிக்கொண்டு ஏனைய மதத்திற்கு எதிராக நீங்கள் வாய்க்கு வந்த மாதிரி பேசுவதற்கு முடியுமா என்று அவர்கள் வினவுகின்றனர்.

பௌத்த மதம் பொய் பேசுவதை தடுத்துள்ளது. இஸ்லாம் மார்க்கம் பொய் பேசுவதை பெரும் பாவமாக கருதுகின்றது. ஏனைய சமயங்களும் பொய்பேசுவதை விலக்கியே உள்ளன. ஆனால் பௌத்த மதத்தைக் காக்க வந்த நீங்கள் எப்படி சரளமாக பொய்யை பேசுகின்றீர்கள் என்றுதான் எல்லோரும் அங்கலாய்க்கின்றனர்.

உண்மையில் பௌத்த மதத்தில் நீங்கள் பற்றுதல் வைத்திருந்தால் புத்தபெருமானை நேசிப்பவராகவும் அவரது போதனைகளைப் பின்பற்றுபவராகவும் இருந்தால் ஏனைய இனத்தவர்களுக்கெதிராக நீங்கள் ஒரு போதும் செயற்படமாட்டீர்கள் என்று பௌத்த சகோதரர்கள் பலரும் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கின்றேன்.

அப்படியென்றால் உங்களைப்பற்றிய பௌத்த மக்களது மதிப்பீடு எத்தகையது என்பதை நான் கூறவேண்டிய தேவையில்லை.

உங்களது வித்தியாசமான கருத்துக்களால் மக்கள் உங்களை வித்தியாசமாகவே பார்க்கின்றனர்!

பௌத்த மதத்தைச் சேர்ந்த சின்னஞ் சிறுசுகள் கூட உங்களை நீங்கள் விரும்பாத பெயர் கூறி அழைப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் சிங்கள சகோதரரின் வீட்டில் நான் பேசிக் கொண்டிருந்தபோது தொலைக்காட்சி செய்தியொன்று உங்களது ஏதோ ஒரு கருத்தை ஒளிபரப்ப ஆரம்பித்தது.

அதனை அவதானித்த இரண்டு குழந்தைகளில் ஒன்று ' அர.......' (அந்தா..........) என்று உங்களுக்கு ஒரு பட்டபெயர் சூட்டி கேளியாக சிரித்ததை பார்த்த நான் ' எஹம கியன்ட எபா'( அப்படி சொல்ல வேண்டாம்) என்று அவர்களிடம் கூறினேன்.

அப்போது என்னோடு பேசிக் கொண்டிருந்த அந்த சிங்கள சகோதரர் ' அவர் செய்கிற வேலையும் அப்படித்தான்' என்று கூறியதுடன் உங்களை சம்பந்தப்படுத்தி 'கிரேன் பாஸ் வழக்கு' தொட்டு பல்வேறு விடயங்களைக் கிண்டிக் கிளறினார். உங்களைப் போன்றவர்களால் புத்த பெருமானின் போதனைகள் சிதைக்கப்படுவதாகவும் நீங்கள் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே நோக்கமென்று கூறி அதனை அழிப்பதாகவும் ஆவேசப்பட்டார்.

இலங்கையில் முதன்முதலாக தீக்குளித்து தனது இன்னுயிரை தியாகம் செய்த தேரரின் செயலையும் கடுமையாக விமர்சித்த அவர் அவரது தியாகத்தை சிலரின் பணத்திற்கு ஏற்பட்ட அநியாயமாகவும் விளக்கினார். எது எப்படியிருந்தபோதும் அவரது கருத்துக்களில் நான் முழுமையாக உடன்படவில்லை. அதற்குக் காரணம் வேறு ஓர் விடயமாகும்.

ஞானசார தேரர் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்கள் மீது ஆவேசமாக கருத்துக் கூறுவதைப் போல உங்களுக்கெதிராக ஆவேசமாக கருத்துக் கூறும் சிங்களச் சகோதரர்கள் ஏராளமாக உள்ளதை என்னால் காணமுடிகிறது.

ஆனாலும் அவர்கள் அவேசமாகக் கூறும் கருத்துக்களில் வெறும் ஆவேசம் மட்டுமன்றி ஆழ்ந்த உண்மைகளும் உறைந்திருப்பதை உணரமுடிகிறது.

இந்த அரசாங்கத்தில் அதிகார பலத்திலிருக்கும் 'நீங்கள் கூறும்' ஓரிருவரைத் தவிர ஏனையவர்கள் அனைவருமே உங்களுக்கெதிரான கருத்திலேயே இருக்கின்றார்கள்.அரசாங்க அமைச்சர்களும் பொறுப்பு வாய்ந்த பௌத்த மதக்குருக்களும் நீங்கள் கட்டிக்காத்து நிற்கின்ற பொது பலசேனா அமைப்பை 'பொய்' சேனா அமைப்பாகவே பார்க்கின்றனர்! ஆனால், நான் உங்களையோ அல்லது உங்கள் அமைப்பையோ முழுமையாக அவ்வாறு பாhக்கவில்லை.

எனவே, உங்களதும் உங்களது பொது பலசேனா அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் சிங்கள சகோதரர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதனை நீங்கள் கொஞ்சமாவது கவத்தில் எடுப்பது உங்கள் அமைப்பின் நோக்கத்தை சீரமைப்பதற்கு உதவுமென நான் கருதுகின்றேன்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதே உங்கள் அமைப்பின் முக்கியமான நோக்கமாக இருப்பின் பௌத்தர்களைப் பொருத்தமட்டில் நீங்கள் எடுத்துக்காட்டும் அந்த நோக்கம் மிகப்புனிதமானது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். நீங்கள் இயக்கமாகச் செயற்படுவது ஒருபுரமிருக்க பௌத்தர்கள் ஒவ்வொருவருமே அந்த நோக்கத்தை தலைமேல் எடுத்துச் செயற்படுவது இன்றியமையாதாகும். இதேவேளை, அந்த உன்னத நோக்கத்தில் உடன்படாதவர்கள் உண்மையான பௌத்தர்களாக ஒருபோதும் இருக்கமுடியாது என்பது வெளிப்படையான விடயமாகும்.

இந்தவகையில் பொளத்த மதத்தைப் பாதுகாப்பதே பொதுபலசேனாவின் முக்கியமான பணி என்று நீங்கள் கூறுவதை முஸ்லிம்களுக்கு எதிரான உங்கள் பணியோடு ஒப்பிட்டு எவராவது ஏற்றுக் கொள்வதாக இருந்தால் இலங்கையில் இருக்கும் பௌத்தர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான பௌத்தர்களா? என்ற கேள்விக் குறியொன்று எழவே செய்யும்.

இவ்வேளையில்,பொது பலசேனாவையும் உங்களையும் ஒருபக்கம் வைத்துக் கொண்டு யார் உண்மையான பௌத்தர்கள்? என்ற ஒரு சிக்கலான வினாவிற்கு விடையைத் தேடும்போது பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் சிலரின் கூற்றுக்கள் அந்த வினாவிற்கு விடை காண உறுதுணை புரிவதோடு உங்களையும் பௌத்தத்தையும் மிகத் தெளிவாக வேரறுத்து விடுகின்றன. அத்தகைய கருத்துக்கள் சிலவற்றை உங்களது பார்வைக்காகத் தருகின்றேன்.

ஞானசார தேரர் அவர்களே,

நீங்களும் நீங்கள் சார்ந்திருக்கும் பொதுபலசேனாவும்....?

கொள்கைப் போராட்டத்தின் அடிப்படைவாதிகள்...

' கொள்கைவாத போராட்டத்தின் அடிப்படைவாதிகளே முஸ்லிம் மக்களது மனதை நோகடிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.பௌத்த மதமானது இத்தகைய செயற்பாட்டை ஒருபோதும் ஆதரிக்காது.(2013.01.11ஆம் திகதியன்று கண்டி லைன்பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தது.)

பௌத்த வழிமுறையில் செயற்படவில்லை...

'பொது பலசேனா அமைப்பானது பௌத்த வழிமுறையில் செயற்படவில்லை. அது தேவதத்தனின் வழிமுறையில் செயற்படுகிறது' (2013.01.31 ஆம் திகதியன்று கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சமசமாஜ கட்சியின் செயலாளர் விக்ரமபாகு தெரிவித்தது)

தலிபான் நிகாய...

' முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் பொது பல சேனா அமைப்பை நான் 'தலிபான் நிகாயயாகவே பார்க்கின்றேன்.' (2013.02.14ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தது.)

அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்....

'நாடு முழுதும் மதவாதத்தை தூண்டிவரும் பொது பல சேனா,சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.' (2013.02.14ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் தினேஷ; குணவர்த்தன தெரிவித்தது.)

கட்டுக் கதைகள்....

'தற்போது வெற்றி பெற்ற சிங்கள தேசிய வாதத்தின் வழிநடத்துனர்களுக்கு அதனை தொடராக நிலைபெறச் செய்யவும் அதனை முன்னெடுத்துச் செல்லவும் புதியதொரு எதிரியொன்று தேவையாகவுள்ளது. முஸ்லிம்களும் அவர்களது கலாசாரமும் சிங்கள தேசிய வாதத்தின் எதிர் அடையாளம் என்பதை நிறுவுவதற்கான கட்டுக் கதைகளை முன்னெடுப்பது அதன் விளைவாகவேயாகும்.' (சட்டத்தரணி ஷpரால் லக்திலக்க எழுதிய கட்டுரையில் தெரிவித்தது. இக்கட்டுரை மீள்பார்னை இணையத்தில் 2013.02.19ஆம் திகதியன்று பதிவேற்றப் பட்டிருந்தது.)

அநீதிக்கு இடமில்லை....

' நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனக்கெதிராக செயற்பட்ட சில பிக்குகளே முஸ்லிம்களுக்கெதிரான சூழ்ச்சியின் பின்னால் உள்ளதனை உணர்கின்றேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் இதன் பின்னால் உள்ளதனை நான் அறிவேன்' (2013.03.01ஆம் திகதியன்று பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போது அவர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெரிவித்தது.)

மத அடிப்படைவாதிகள்...

' மத அடிப்படைவாதிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஏனைய மதத்தவர்களுடன் முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றனர். இத்தகையவர்கள் மத ஒழுக்கங்களையோ மத தலைவர்களின் கருத்துக்களையோ பின்பற்றுவதில்லை.' (2013.03.02 ஆம் திகதியன்று பண்டார நாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மத சமத்துவ மாநாட்டில் பேசும் போது கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்தது.)

பொது பலசேனாவில் உள்ளவர்கள் பௌத்த சமயத்தலைவர்கள் அல்லர்...

'பொது பல சேனாவில் உள்ளவர்கள் பௌத்த சமயத் தலைவர்கள் அல்லர். அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள மடியாது.' ( 1013.03.13 ஆம் திகதியன்று ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தது. )

பொது பலசேனா அமைப்பினர்...

'பொது பலசேனா அமைப்பினர் முழுமையாகவே பௌத்த மதத்திற்கு விரோதமாகத்தான் செயற்படுகின்றார்கள்.' ( சிரேஷ;ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் 'விடிவெள்ளி'யின் நேர்காணலொன்றில் தெரிவித்தது. 2013.04.04)

ஞானசார தேரர் அவர்களே,

இக்கருத்துக்கள் வழியாகப் பார்க்கின்ற போது உண்மையான பௌத்தர்கள் யார் என்பது நான் கூறி நீங்கள் தெரிய வேண்டிய ஒரு விடயமல்ல.

எனவே,இதே நிலையில் நீங்கள் கூறுகின்ற கருத்தும் பௌத்தரின் கருத்தாகவோ அல்லது பௌத்த மதம் தழுவிய கருத்தாகவோ இருக்கும் என்று நான் ஏற்றுக் கொண்டால் கூட வேறு எவரும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வரமாட்டார்கள்!

ஞானசார தேரர் அவர்களே,

நான் இவ்வாறு கூறும் போது 'எனது கருத்தை ஏற்றுக் கொள்ளாது விட்டால் என்பின்னால் பெருந்தொகையான மக்கள் இணைந்திருப்பார்களா?' என்று என்னைப்பார்த்து நீங்கள் கேட்கலாம்.

ஒருவகையில் அது பொருத்தமான கேள்வியாகப்பட்டாலும் உங்களது பேச்சைக் கேட்க ஒன்றிணைந்தவர்களை -நீங்கள் ஏற்பாடு செய்த பேரணிகளில் கலந்து கொண்டவர்களை மொத்தமாக அப்படி நோக்குவது பொருத்தமாகப்படாது. நானும் எனது நண்பர்கள் பலரும்கூட உங்களது கூட்டங்களின்போது வெறும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருக்கின்றோம்.

ஞானசார தேரர் அவர்களே,

உங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனேகர் உங்கள் கருத்தில் உடன்படுவார்களா என்பது கூட எனக்கு சந்தேகம். அவர்களில் பெரும்பாலானோர் 'சும்மா' ஒரு பொழுது போக்குக்காக கலந்து கொள்வதாகவே நான் கருதுகின்றேன்.

ஒரு உதாரணத்திற்காக கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை உங்கள் கவனத்திற்குத் தருகின்றேன். நீங்கள் 2013 மார்ச் 17ஆம் திகதியன்று கண்டி நகரத்தில் சந்தைக் கட்டிடத் தொகுதிக்கு முன்னால் உங்களது பொது பல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலின் போது முஸ்லிம்கள் பௌத்தர்களுக்கு வழங்கும் உணவுகளில் மூன்று முறை எச்சிலை துப்பியதன் பின்பு வழங்குகின்றனர் என்றும் அவ்வாறு துப்பிய பின்புதான் வழங்க வேண்டும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்றும் நீங்கள் பலமாக கருத்துக்களை முன்வைத்திருந்தீர்கள். ஆனால் உங்கள் கருத்துக்களை கேட்க வந்த சிங்கள சகோதரர்கள் முஸ்லிம்களது உணவகங்களில் இருந்ததெல்லாவற்றையும் முந்திக் கொண்டு வாங்கி சாப்பிட்டதன் மூலம் உடனடியாகவே உங்கள் கருத்திற்கு விளக்கம் கொடுத்ததைக் காணமுடிந்தது!

ஞானசார தேரர் அவர்களே,

பதுளை வீல்ஸ்பாக் மைதானத்தில் 2013.06.15ஆம் திகதியன்று இடம்பெற்ற ஒன்று கூடலில் பொளத்தர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று முத்திரை குத்திய நீங்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பனிடவே வருகை தந்ததாகவும் புதிய கதையைக் கூறியுள்ளீர்கள்.

இந்தக் கதையைக் கேட்டதும்; விழுந்து விழுந்து சிரித்தேன். அப்போது பழைய ஞாhகமொன்று எனக்கு வந்தது. இதற்கு முன்பு நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோது இலங்கை அரசாங்கத்தில் உள்ள ஒருவர் 'உங்களை அந்த கொழும்பு பக்கமாக உள்ள எங்கேயோ அனுப்ப வேண்டும் என்று சொன்னாரே... அந்த ஞாபகம்... அது உங்களுக்கு ஞாபகமோ என்னவோ தெரியாது!

நீங்கள் இலங்கையின் வரலாற்றை கட்டாயம் படிக்க வேண்டும். நான் இவ்வாறு கூறும்போது 'இல்லை நான் வரலாற்றைப் படித்திருக்கின்றேன்' என்று நீங்கள் கூறுவீர்களாயின் நான் ஒரு போதும் அதனை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.

நாங்களும் வந்தவர்கள்தான், நீங்களும் வந்தவர்கள்தான், கொஞ்சம் முந்திப் பிந்தி! நாங்கள் ஏன் வந்தோம்? எப்போது வந்தோம்? என்று தெளிவொன்று தேவையென்றால் பள்ளிக் கூடம் செல்லும்; ஒரு சின்னப் பிள்ளையை கேட்டாலே போதும் விளக்கம் கிடைக்கும்.

ஞானசார தேரர் அவர்களே,

சிறி ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை சிரேஷ;ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் 'விடிவெள்ளி'யின் நேர்காணல் ஒன்றில் வரலாற்றை மையப்படுத்தி சிறுபான்மையினரை ஓரங்கட்டும் நிலைமை சம்பந்தமாகக் கேட்கப்பட்டபோது அவர் தெரிவித்ததை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

'உண்மையில் இது மனிதாபிமானமற்ற தீவிரவாதக் கருத்தாகும். இது சிங்கள பௌத்தர்களின் கருத்தல்ல.எந்தவொரு சிங்களவரும் அப்படி சொல்ல மாட்டார். சிங்கள இனத்தில் யாராவது அப்படி சொன்னால் அது மிகப் பெரிய தவறு.

வரலாற்றை மையப்படுத்தி கதைப்பதென்றால் சிங்களவர்களாலும் இங்கு இருக்க முடியாது. 2600 வருடங்கள் பழைமை வாய்ந்த வரலாறுதான் அவர்களுக்குமுள்ளது. அதற்கு முன்னரும் இந்த நாட்டில் மக்கள் வாழ்ந்தற்கான மிகப் பழமைவாய்ந்த தொல்லியல் பதிவுகள் காணப்படுகின்றன. பல இனங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இவ்வாறு வாழ்ந்தவர்கள் சிங்களவர்கள் என்பதற்கான எந்த பதிவுமில்லை. அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினர் என்று கூட அறியமுடியாமல் உள்ளது.

எனவே, அவ்வாறானதோர் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமேயானால் சிங்கள பௌத்தர்களாகிய எமக்கும் இந்நாட்டில் வாழ முடியாது. எமக்கு முன்பு பல ஆதி குடிகள் வாழ்ந்துள்ளனர்.

ஞானசார தேரர் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்களுக்கெதிராக ஏதாவது கருத்துக்களைக் கூறும் போது உங்களைப்பற்றி சரியாக அறிந்து வைத்துள்ள முஸ்லிம்கள் அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத போதும் உங்கள் கருத்துக்களை ஜீரணிக்காத- ஜீரணிக்கவே முடியாத பௌத்த குருமார்கள் அல்லது பௌத்த சகோதரர்கள் கூறும் பதிலை நீங்கள் கரிசனையுடன் படித்தல் வேண்டும்.

நீங்கள் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை குறித்து மோசமான கருத்துக்களைப்பரப்பி வந்த போது கலாநிதி வஜிர சிறி நாயக்க தேரர் கூறிய கருத்து உங்களது கருத்தின் அடிப்படையையே அழித்திருக்குமென்று நினைக்கின்றேன். கலாநிதி வஜிர சிறி நாயக்க தேரர் கூறிய அக்கருத்தின் சில வாசகங்களை உங்களுக்குத் தருகின்றேன்.

' முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்க மிக்கது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும். இஸ்லாத்தில் நல்ல பண்புகள் உள்ளன. மற்ற பெண்களை பார்ப்பது ஹராம்,வட்டி எடுப்பது ஹராம். இவை நல்ல விடயங்கள். ஹராம் ஹலால் என்று பேசிப் பேசி இருக்காது நல்லவற்றை நாம் பின்பற்றவேண்டும்'.

ஞானசார தேரர் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துக்களை மனம் போன போக்கில் பேசுவதாக அந்தந்த விடயங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

முஸ்லிம்களது எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக நீங்கள் கருத்துத் தெரிவித்த போது பல பௌத்த சகோதரர்கள் உங்கள் கருத்துக்களுக்கு எதிராக சரியான விளக்கங்களை வழங்கியிருந்தனர்.

கண்டி,உடுநுவர பிரதேசத்தில் 2013.02.05ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க முஸ்லிம்களின் சனத்தொகை அதிரிப்பு சம்பந்தமாக தெரிவித்த கருத்தொன்றை மாத்தரம் உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றேன். அக்கருத்து இதுதான்:

'முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பு சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. இதுவரை மேற் கொள்ளப்பட்டுள்ள சனத்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களது சனத்தொகை சிங்களவர்களின் சனத்தொகையைவிட அதிகரித்துள்ளதாக எங்கும் காணமுடியவில்லை.'

ஞானசார தேரர் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்களுக்கெதிராக முன்பின் பார்க்காமல் கருத்துக் கூறுவதைப் கேட்கின்றபோது முஸ்லிம் சகோதரர்கள் மட்டுமல்ல ஏனைய இன சகோதரர்களும் சிரிப்பதைப் பார்த்திருக்கின்றேன்.

2013 மார்ச் 19ஆம் திகதியன்று தமிழகத்தில் சிங்கள பௌத்த பிக்கு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அந்நாட்டில் இயங்கும் இஸ்;லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றுக்கு சம்பந்தமுள்ளதாக நீங்கள் குற்றம் சுமத்தி இருந்தீர்கள். அவ்வாறு நீங்கள் குற்றம் சுமத்தும் போது இந்திய ஊடகங்கள் பிக்குவை தாக்கியது யாரென்பதை உலகத்திற்கே தெரிவித்துவிட்டன.

இத்தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்லர் அவர்கள் வேறு இனத்தவர்கள் என்பதை புகையிரத நிலையத்தில் பொருத்தியிருந்த இரகசிய கமரா காட்டிக் கொடுத்ததைத் தொடர்ந்து அத்தாக்குதலை நடத்தியவர்கள் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதும் உங்கள் கருத்துக்கள் ஊடகங்களில் வழம்வந்து கொண்டிருந்தது.

ஞானசார தேரர் அவர்களே,

முஸ்லிம்களுக்கெதிராக ஆதாரமற்ற கருத்துக்களை கற்பனை பண்ணிக் கூறுகின்றீர்களா? அல்லது முஸ்லிம்கள் சம்பந்தமாக நீங்கள் அறிந்தவற்றை மட்டும் வைத்து கூறுகின்றீர்களா? அல்லது உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக யாராவது இவ்வாறுதான் கூறவேண்டும் என்று கூறும் ஆலோசனைப்படி கூறுகின்றீர்களா? இவ்வினாவிற்கு திடமான பதிலைத் தேடிக் கொள்ளுவது உங்களுக்கு உதவியாக அமையும்.

' புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாத்தின் பாசறைகள், அரபு மத்ரஸாக்கள் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையங்கள்' என்று ஒரு பிரசித்தமான வரைவிலக்கணத்தை வரைந்துள்ளீர்கள்.இந்த வரைவிலக்கணத்தை வரைவித்தது யார்? இந்த வரைவிலக்கணத்தின் முதல் பகுதியை 2013.01.22ஆம் திகதியன்றும் இரண்டாம் பகுதியை 2013.06.05ஆம் திகதியன்றும் உலகறியச் செய்தீர்கள். இதில் கொஞ்சமாவது உண்மை உண்டா?! உங்கள் மனதில் கையை வைத்துக் கேளுங்கள்!

இவ்வாறு நீங்கள் வரைவிலக்கணம் செய்த போது ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கவலையும் எனக்கு ஏற்படுகின்றது. நான் எந்த இறைவனை தொழுகின்றேனோ அந்த இறைவனை தொழுவதற்காக அமைக்கப்பட்ட பள்ளிவாசலைப் பற்றியாவது உங்களுக்கும் என்னோடு இந்நாட்டில் இணைந்து வாழும் ஏனைய சகோதரர்களுக்கும் சரியான புரிதலை உருக்கவேண்டிய முஸ்லிம்கள் மீதும் – அவர்களில் ஒருவனாகிய என்மீதும் சுமத்தபட்ட பொறுப்பை நான் சரியாகச் செய்ய வில்லை என்பதை நினைக்கும் போதுதான் எனக்கு கவலை ஏற்படுகின்றது.

அதேபோல் எந்த இறைவனை ஏன், எவ்வாறு தொழவேண்டும்? மனித வாழ்வின் இலட்சியம் என்ன? பூரணமான வாழ்கை வழிகாட்டல் எது? என்பவற்றை போதிக்கும் அரபு மத்ரஸாக்களைப் பற்றிய சரியான புரிதலை உங்களுக்கும் என்னோடு இந்நாட்டில் இணைந்து வாழும் ஏனைய சகோதரர்களுக்கும் உருவாக்கவேண்டிய முஸ்லிம்கள் மீதும் –அவர்களில் ஒருவனாகிய என்மீதும் சுமத்தபட்ட பொறுப்பை நான் சரியாகச் செய்ய வில்லை என்பதை நினைக்கும் போதுதான் எனக்கு மேலும் கவலை ஏற்படுகின்றது.

ஞானசார தேரர் அவர்களே,

முஸ்லிம்களது பள்ளிவாசல்களைப் பற்றியும் அரபு மத்ரஸாக்கள் பற்றியும் அங்கு நடப்பவை பற்றியும் நீங்கள் சரியாக விளங்கிக் கொள்வதற்கு உங்களையும் என்னையும் படைத்த இறைவன் எனக்கு தந்துள்ள அத்தனை உரிமைகளையும் உங்களுக்கும் தந்துள்ளான்.

எனவே,பள்ளிவாசல், அரபுக்கல்லூரி முதலானவை பற்றி அறிந்து கொள்வதற்கு நீங்கள் விரும்புவீர்களாக இருந்தால் உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் கூறும் எந்தவொரு பள்ளிவாசலுக்கும் அத்தோடு எந்தவொரு அரபு மத்ரஸாவுக்கும் முன்னறிவிப்பு இல்லாமல் அழைத்துச் சென்று அங்கு நடப்பவற்றை நுணுகி ஆராய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை எந்தவொரு நிபந்தனையும் இல்லாது வழங்குவதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன்.

நீங்கள் பள்ளிவாசல்கள் அரபு மத்ரஸாக்கள் சம்பந்தமாக உண்மையைக் கண்டறிவதற்கு முயற்சி எடுக்கும்போது அம்முயற்சியை என்னையும் உங்களையும் படைத்த இறைவன் விரும்பிக் கொள்வானாக இருந்தால், என்னைவிட உயர்ந்த பேறுக்கு சொந்தக் காரராக மாறும் அதிர்ஷ;டம் கூட உங்களை வந்தடைலாம்!

ஞானசார தேரர் அவர்களே,

முஸ்லிம்களிடம் நீங்கள் குறை கண்டால் அது பற்றி உரத்துப் பேசுங்கள். முஸ்லிம்கள் திருந்திக் கொள்வார்கள். ஆனால் உங்களையும் என்னையும் படைத்த இறைவனின் வேதத்திலும் அவனைத் தொழும் பள்ளிவாசலிலும் அத்தொழுகையைக் கற்றுக் கொடுக்கும் அரபு மத்ரஸாக்களிலும் இல்லாததை இருப்பதாக இனியும் பேச முனையாதீர்கள்!

எனது இத்திறந்த மடலுக்கான பதிலை உங்களது மனப் புத்தகத்தில் எழுதி, அதன் பிரதியை திறந்த வழியிலோ அல்லது எனது மின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்!

எந்த இறைவன் உங்களையும் என்னையும் எல்லோரையும் படைத்தானோ அந்த இறைவனை மீண்டும் பிரார்த்தித்து முடிக்கின்றேன்.

நன்றி.

இப்படிக்கு,

மூதூர் முறாசில்.

No comments:

Post a Comment