Wednesday, June 12, 2013

* ஐயா ஞானசார தேரரே உங்களுக்கும் LTTE பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?


ஐயா ஞானசார தேரரே உங்களுக்கும் LTTE பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? 


-
இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பயங்கரவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடுகின்ற பிரபல பேரினவாத அமைப்பான பொது பல சேனா அமைப்பின் பொதுக்கூட்டமொன்று கடந்த ஒன்பதாம் திகதி அம்பாறை நகரில் இடம்பெற்றது அக்கூட்டத்தில் குறித்த பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட ஒரு விடயம் காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதையாகவே நோக்கப்படுகிறது.

அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பூரண ஆதரவுடன் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகரில் அமையப் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள இவ்வேளையில் கடந்த ஒன்பதாம் திகதியன்று கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அப் பல்கலைக்கழகத்தை மூடவேண்டுமென்றும் அவ்வாறு மூடப்படாவிட்டால் அதற்கெதிராக தமது அமைப்பின் சார்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

மதிப்பிற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்களே!

பல தசாப்த காலமாக பயங்கரவாத படுகுழிக்குள் தள்ளப்பட்டிருந்த நமது இலங்கைத் திருநாடு சுமார் மூன்று ஆண்டுகளாகவே ஒரு நிம்மதியான சூழலில் காணப்படுகின்றது.இவ்வேளையில் பௌத்த மதத்தை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்ட நீங்கள் பௌத்தமதம் அழிந்து கொண்டிருக்கும் எந்தவொரு வாசல்களையும் மூடுவதற்கு முயற்சிக்காமல் வெறுமனே முஸ்லிம்களின் அடிச்சுவடுகளை மாத்திரம் அளிக்க எத்தனிப்பத்தேன்?

உண்மையில் இந்நாட்டில் நீங்கள் கூறுவது போன்று பௌத்தர்களுக்கு மதரீதியான சிக்கல்கள் இருக்குமானால் அதனை ஜனநாயக ரீதியான முறையில் தீர்த்துகொள்வதை புறக்கணித்து பயங்கரவாத செயல்பாடுகள் மூலம் தீர்க்க முற்பட்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுவதில் உங்களுக்கு கிடைக்கும் இலாபம்தான் என்ன?

அன்று விடுதலைப்புலிகள் தங்களின் அற்ப சொற்ப இலாபங்களுக்காக தமிழர்களுக்குப் பிரச்சினை என்னும் போர்வையை போர்த்திக்கொண்டேதான் அப்பாவித்தமிழ் மக்களையும் சீரழித்து இந்நாட்டின் எதிர்காலத்தையும் பல தசாப்தங்களுக்கு பின் தள்ளிவிட்டுச் சென்றார்கள்.

இன்று நீங்களும் பௌத்தர்களுக்குப் பிரச்சினை என்று கோஷமிட்டுக்கொண்டு பிரச்சினைக்குரிய வாயிலை விட்டு விட்டு வெறுமனே முஸ்லிம்களின் மதம் சார்ந்த உரிமைகளை நசுக்க முற்பட்டால் உங்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?

இலங்கை நாட்டிற்கு மிகவும் விசுவாசம் மிக்க குடிமக்கள் தாங்கள்தான் என்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்றும் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள் இந்நாட்டின் தலைவர்கள் சர்வதேச விசாரணை மன்றங்களில் குற்றவாளிகளாக கூண்டிலேற்றப்பட்டு நின்றபோது உங்களின் நாட்டின் மீதுள்ள விசுவாசமும் அக்கறையும் எங்கே சென்று ஒழிந்தது?

ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறுபட்ட மதங்களும் பலதரப்பட்ட கலாச்சாரங்களும் இருப்பது ஒரு சாதாரண விடயம்.அந்த வகையில் இலங்கை நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.அடுத்தவர்களின் உரிமைகள் உணர்வுகளை மதித்து நடப்பதே மனித இயல்பின் அடையாளம்.ஆனால் ஒரு பெரும்பான்மை சமூகத்திற்கே வழிகாட்ட வேண்டிய பொறுப்பிலுள்ள மதப்போதகர்களாகிய நீங்கள் இனவாதம், பிரதேசவாதம் பேசி அப்பாவி மக்களை தவறானமுறையில் வழிநடாத்துவது தாங்கள் சார்ந்த மதத்திற்கு உகந்த ஒரு விடயமா? உண்மையில் கௌதம் புத்தர் பெருமான் இதைத்தான் போதித்துவிட்டுச் சென்றாரா?

முஸ்லிம்கள் தங்களின் மதக்கிரியைகளுக்காக தாங்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலேயே அதற்கான வழிவகைகளை மேற்கொள்கின்றனர்.முஸ்லிம்களின் எந்தவொரு வணக்க முறைகளும் யாதொரு சமூகத்திற்கோ தனிமதர்களுக்கோ எந்தவொரு வகையிலும் இடையூறு விளவிக்காதவையாகும்.இஸ்லாமிய வணக்கமுறைகளில் இசை கிடையாது, கூத்து கும்மாளங்கள் கிடையாது, ஊர்வலங்கள் கிடையாது இதய நோயாளர்களுக்கும் படிக்கின்ற மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற பட்டாசு, வாண வேடிக்கைகளை காணமுடியாது.இன்னும் சொல்லப்போனால் பெருநாள் தினங்களில் கூட அந்நிய மதத்தினரோடு அழகான முறையில் உறவாடுகின்ற உன்னத சமூகமே முஸ்லிம் சமூகம்.

அவ்வாறிருக்க இந்நாட்டில் இளைஞர்களை வழி கெடுக்கின்ற எத்தனையோ இடங்கள் இருக்கின்றன.அதுவும் நீங்கள் எதனை புனித பூமி என்றும் புனித பிரதேசம் என்றும் அடையாள படுத்துகிறீர்களோ அப்பிரதேசங்களிலேயே சாராய விற்பனை நிலையங்கள்,நட்சத்திர ஹோட்டல்கள் என்னும் பெயர்களில் இயங்குகின்ற உல்லாச விபச்சார விடுதிகள், பலசூதாட்ட, களியாட்ட விடுதிகள் இன்னும் இது போன்ற சமூகங்களை, குடும்பங்களை குட்டிச்சுவராக்குகின்ற எத்தனையோ விடயங்கள் அரங்கேறுகின்றன.

இப்போது கூட சுமார் முப்பத்தியைந்து கோடி ரூபா செலவில் கொழும்பு சம்போடி விகாரைக்கு அருகில் மிகவும் நவீன முறையிலான சூதாட்ட விடுதியொன்று அமையப்பெறவுள்ளது.இக் கசினோ விடுதியினால் விகிதாசார அடிப்படையில் அதிகளவில் சூறையாடப்படுவது சிங்கள மக்களின் வாழ்வாதாரமும் கலாச்சாரமுமே. சிங்கள மக்களை பாதுகாப்போம் என்றும் பௌத்த மதத்தைப் பாதுகாப்போம் என்றும் சந்து பொந்துகளிலெல்லாம் கொக்கரித்துத் திரிகின்ற நீங்கள் இக் கசினோ விடுதி விடயத்தில் ஆப்பிளுத்த குரங்குகள் போல் அமைதியாக இருப்பதன் அர்த்தம் என்ன?

பௌத்தத்தின் புனித பூமியான இலங்கை நாட்டில் மாடுகள் அறுப்பதற்கு எதிராக தீக்குளிப்புவரை சென்ற நீங்கள் (அது ஒரு நாடகம் என்பது வேறு விடயம்) கசினோ என்னும் பெயரில் இப்புனித பூமியில் நாளை நடக்கவிருக்கும் சூதாட்டத்திற்கு எதிராகவும் காம களியாட்டத்திற்கு எதிராகவும் எடுக்கவிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கைதான் என்ன?

No comments:

Post a Comment